அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கெதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப செயற்படத் தவறியதன் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணையாளர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தொிவித்து அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோாி ஷானி அபேசேகர மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையின் தலைவர் நிஸங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழு , தமக்கு விடுத்த அழைப்பை ஆட்சேபித்து ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்தாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, நிஸங்க சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில், தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாக்குறுதியளித்திருந்த நிலையில், பிரதிவாதிகள் பரிந்துரைகளை முன்வைத்ததன் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ளதாக ஷானி அபேசேகரவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பிரதிவாதிகள் நீதிமன்ற அவதூறு செய்துள்ளதாக தீர்மானித்து, அரசியலமைப்பின் 105 – 3ஆம் சரத்திற்கு அமைய அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி அவா்களை குற்றவாளிகளாக தீர்மானித்து தண்டனை வழங்குமாறும் ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.