நாட்டு மக்களுக்காக அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும், அனைத்து மக்களும் அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அந்த பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்க தயாராகவுள்ளது என தெரிவித்தார்.
விவசாயிகள் தத்தமது கைகளிலுள்ள விவசாய உபகரணங்களை எடுத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள் என தெரிவித்த அவர், அதேபோல் இல்லத்தரசிகள் சமையலறையிலிருக்கும் உரல், கத்தி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீதியில் இறங்குங்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவதற்கு எனக் கோரியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டை, மக்கள் வாழக் கூடிய நாடாக விரைவில் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உணவு, டொலர் பிரச்சினைக்கு தீர்வைப் பெற வேண்டும். உரப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனவே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரமே தற்போதைய அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, எனவே அனைத்து மக்களும் அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் தயாராக வேண்டும்.
இது கொரோனாவால் ஏற்பட்ட நிலை இல்லை. உலகில் ஏனைய நாடுகளில் வெளிநாட்டு இருப்புகள் அதிகரிக்கின்றன. பங்களாதேஷ் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் வெளிநாட்டு இருப்புகள் அதிகம் காணப்படும் போது, இலங்கையில் மாத்திரம் இப்படியொரு மோசமானநிலை கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. நாட்டை அழித்துள்ள இந்த அரசாங்கத்தை குறுகிய காலத்துக்குள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நளின் பண்டார வலியுறுத்தி உள்ளார்.