இந்தப் பூமிக்கு நாம் எங்கிருந்து வந்தோம்? பிரபஞ்சத்தில் மனிதன்தனியே பூமியில் மட்டுமா வாழ்கிறான்?இவை போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்கான மனித குலத்தின் இடைவிடா அறிவியல் முயற்சிகளில் மற்றொரு சாதனையின் தொடக்க நாளாக இன்றைய நத்தார் தினம் அமைந்துவிட்டது.
ஜேம்ஸ் வெப் (James Webb) எனப் பெயரிடப்பட்ட விண்வெளி ஆராய்ச்சித்தொலைக்காட்டி (Space Telelescope ) பிரெஞ்சு கயானாவில் (French Guiana) உள்ள விண்வெளிப் பயணத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
ஏரியன்-5 (Ariane 5) என்ற விண்வெளி ரொக்கெட் அந்தப் பாரிய தொலைக்காட்டியைச் சுமந்தவாறு பிரெஞ்சு நேரப்படி இன்று மதியம் 13.20மணிக்கு விண்வெளிக்குப் புறப்பட்டது.பல முறை ஒத்திவைக்கப்பட்டு வந்தஇந்தப் பயணம் உலகெங்கும் உள்ள அறிவியலாளர்களது தீவிர எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது.
ஜேம்ஸ் வெப் தொலைக்காட்டியைத்தாங்கிய விண் கலம் சுமார் ஒரு மாதம்பயணித்து – பூமியில் இருந்து 1.5மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரிய சுற்றுவட்டப்பாதையில் (solar orbit) தனது அவதானிப்பு நிலையைச் சென்றடையும்என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆறு மாதங்களில் அது தொழிற்படத் தொடங்கும். நாசா அறிவியலாளர்களுடன் ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சிநிலையங்களது (European and Canadian space agencies) அறிவியலாளர்களும்இணைந்து சுமார் முப்பது ஆண்டுகள் முயற்சி செய்து இந்தப் பாரிய-அதி நவீன தொலைக்காட்டியைத் தயாரித்துள்ளனர்.
அதன் மொத்த செலவு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.பிரான்ஸின் துளுசில் இயங்கும் விண்வெளி ஆய்வு மையம் தொலைக்காட்டியின் தொழில் நுட்பத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகித்துள்ளது.
மனிதன் முதல் முதலில் சந்திரனில் கால் பதித்த காலப்பகுதியில் நாசா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கிய ஜேம்ஸ் வெப் (James Edwin Webb) அவர்களுடைய பெயரே இந்த ராட்சதத் தொலைக்காட்டிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
1990 இல் விண் வெளிக்குச் செலுத்தப்பட்ட முதல் நவீன தொலைக்காட்டியானஹப்பிள் தொலைக்காட்டியின் (Hubble telescope) இடத்தைத் தொடர்ந்து அதைவிட அளவில் மிகப் பெரியதும் ஆகப்பிந்திய தொழில் நுட்பங்களைக் கொண்டதுமான ஒரு விண்வெளி ஆய்வுக் கருவியாக ஜேம்ஸ் வெப் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சூரியன் மற்றும் கோள்கள், பூமி என்பனவற்றை உள்ளடக்கிய பிரபஞ்சம் (Universe) எவ்வாறு தோன்றியிருக்கும் (birth of the Universe) என்று பல புனைகதைகளும் சினிமாப் படங்களும் சித்திரக்கதைகளும்சொல்லி வந்த புதிர்களை அவிழ்க்கின்ற நேரடியான ஆய்வுகளில் மனிதன் இறங்குவதை ஜேம்ஸ் வெப் தொலைக்காட்டியின் (James Webb telescope) இன்றைய பயணம் உலகிற்கு உணர்த்துகிறது.
பிரபஞ்சத்தில் முதல் நட்சத்திரக் கூட்டங்களின்(first galaxies) உருவாக்கம் எவ்வாறு நேர்ந்தது, கோள்கள் மற்றும் பிரபஞ்சத்தில் தொலைவில் உள்ள பொருள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான வளிமண்டலவியல் குணாதிசயங்கள் உள்ளனவா என்பன போன்றஅறிவியல் விவரங்களைத் தொலைக்காட்டி தன் பார்வைக்குள் எடுத்து அதுபற்றிய படங்களை, தகவல்களைப் பூமிக்கு அனுப்பும் எனக் கூறப்படுகிறது.
பிரதானமாக அதன் கருவிகள் பிரபஞ்சஒளி அலைகளது நீளங்களை உடைத்துஅவற்றின் உயிரியல் மற்றும் இரசாயனக்கூறுகளைத் (physical and chemical components) தீர்மானிக்கும் வேலையைச் செய்யவல்லன என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன் பயணமும் தொழிற்பாடுகளும்வெற்றிகரமாக நிறைவேறுமானால் பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறுகிரகங்களில் மனித உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும் பூமிக்கு மனிதர்கள் எவ்வாறு வந்திருக்கமுடியும் என்ற மர்மங்கள் குறித்தும் சிலவிடைகளை அறிவதற்கு ஜேம்ஸ் வெப்தொலைக்காட்டி உதவும் என்று அறிவியல் உலகம் நம்புகிறது.
——————————————————————– –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 25-12-2021