பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.
2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
2013இல் இலங்கை வவுனியாவில் கட்டப்பட்ட ஒரு கோயில் விழாவில் பாடுவதற்காக மாணிக்க விநாயகம் உள்ளிட்டவர்கள் இலங்கை பயணிக்க இருந்தனர்.
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் இசைக் கலைஞர்கள் இலங்கை செல்ல வேண்டாம் என தமிழ்நாட்டில் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதன் பின்னர், தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தாம் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அப்போது மாணிக்க விநாயகம் அறிவித்தார். அப்போது இவருடன் இலங்கை செல்லவிருந்த பிற இசைக் கலைஞர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.