பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் உள்ள நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென கொதிகலன் (boiler) வெடித்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான அந்த ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தபோதும் , ஆலையில் இன்று சட்டவிரோதமாக குறைந்த அளவிலான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஆலையில் இரண்டாவது பிரிவில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், அங்கு இருந்த கொதிகலன் (boiler) திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
வெடிப்பு மிகவும் கடுமையாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள மேலும் பல தொழிற்சாலைகளின் கட்டிடங்களும், அருலிருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் வெடித்து சிதறின. பல கிலோமீட்டர்களுக்கு இந்த வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்,
விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்