உலகம் பிரதான செய்திகள்

அமிர்தசரஸ் படுகொலைகளுக்காக பிரித்தானிய மகாராணியைக் கொல்ல விரும்பிய சீக்கிய இளைஞன் யார்?

“ஜாலியன்வாலா பாக்” வரலாற்றின் நினைவை மீட்ட மாளிகைச் சம்பவம் பிரித்தானிய மகாராணி எலிஸபெத் வசிக்கின்ற வின்ட்சர் கோட்டை வாசஸ்தலத்தினுள் அம்பு ஆயுதத்துடன் ஊடுருவ முற்பட்டார் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்ற 20 வயது இளைஞன் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

இங்கிலாந்தின் தெற்கு நகரமாகிய Southampton இல் வசிக்கும் இந்திய சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரது மகனான ஜஸ்வந்த் சிங் சைல்(Jaswant Singh Chail)என்ற இளைஞரே கைது செய்யப்பட்டு மனநலப் பாதிப்பு நிலையிலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) மகாராணி எலிஸபெத் நத்தார் தினத்தன்று அரச குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காகத் தங்கியிருந்த சமயத்தில் அம்பு செலுத்தும் துப்பாக்கி ஒன்றுடன் கோட்டையின் வேலிக்குள் ஊடுருவிய நிலையில் இந்த இளைஞரைப் பாதுகாவலர்கள் கைதுசெய்திருந்தனர்.

கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பா கநத்தார் தினத்தன்று காலையில் அவ்விளைஞன் “சினப்சற்” தளத்தில் வீடியோ ஒன்றினைப் பதிவேற்றியுள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

1919 இல் பிரித்தானியப்படைகள் இந்தியாவின் அமிர்தசரஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோரைப் படுகொலை செய்த சம்பவத்துக்காக மகாராணியைக் கொல்லப் போவதாக அந்த வீடியோவில் அவர்தெரிவித்திருக்கிறார்.

முகத்தை மறைத்தநிலையில் இளைஞன் பேசுகின்ற அந்த வீடியோப் பதிவு செய்தி ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது. அதில் தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ள அவர், இறந்த பின்னர் அந்த வீடியோவை வெளியிடுமாறு நண்பர்களிடம் கேட்டுள்ளார்.

தங்கள் மகன் ஏன், எதுக்காக, எப்படி இவ்வாறு மாறினான் என்பதை அறிய முடியாதிருப்பதாக அவனது குடும்பத்தினர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.ஓர் இளைஞனின் மனநிலைப் பாதிப்பின் விளைவே இச் சம்பவம் என்று எடுத்துக் கொண்டாலும் அரச குடும்பத்தினரது பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை இச் சம்பவம் அப்பட்டமாக்கி உள்ளது.

மகாராணியின் வதிவிடங்களது பாதுகாப்பை அதிகரிக்குமாறு நிபுணர்கள் கேட்டிருக்கின்றனர். அதே சமயம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சீக்கிய மண்ணில் -பஞ்சாப்பில் – பிரித்தானிய ஏகாதிபத்தியப் படைகள் புரிந்த மிலேச்சத்தனமான மனிதப் படுகொலை நிகழ்வு மீது – அது நடந்து நூறுஆண்டுகள் கடந்த நிலையில் – வின்ட்சர்கோட்டை ஊடுருவல் சம்பவம் மீண்டும் கவனத்தைக் குவித்திருக்கிறது

.🔴ஜாலியன்வாலா பாக் படுகொலை(Jallianwala Bagh massacre)

ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்று அழைக்கப்படும் மனிதப் படுகொலை இந்தியாவில் பிரித்தானியப் படைகள் மேற்கொண்ட கொடுமைகளில் மிக மோசமான – கறை படிந்த-ஒரு தனிச் சம்பவம் ஆகும்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருவர் ஆங்கிலப் படையினரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1919 ஏப்ரல் 13 ஆம் திகதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாவியன்வாலா பாக் பூங்காக் கட்டடத்தினுள் திரண்டு அமைதி வழியில் போராட்டம் ஒன்றை நடத்திய நூற்றுக்கணக்கான இந்தியர்கள் அங்கு வைத்து பிரித்தானிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்போதைய பிரித்தானிய ஆக்கிரமிப்புப்படையைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல்ஆர். ஈ. எச். டையர் (Brigadier-General R. E. H. Dyer) என்ற அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றிவளைக்குமாறு உத்தரவிட்டார்.

நான்கு புறமும் கட்டடத்தால் சூழப்பட்ட பூங்காவின் ஒரேயொரு ஒடுங்கியவாசல் வழியே அனைவரையும் வேளியே வருமாறு கூறிய அவர் அந்த வாயிலில் வைத்து அனைவரையும் துப்பாக்கிகளில் சன்னம் தீர்ந்துபோகும் வரை சுட்டுக் கொல்லுமாறு தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டார் என்று கூறப்படுகிறது.

சீக்கியர்களின் பொற்கோவில் அருகே அமைந்திருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஜாலியன்வாலா பாக் பூங்காவில் இரத்த ஆறு பெருக்கெடுத்தது. உயிரிழந்தவர்களது மொத்தத் தொகை379 முதல் 1,500 வரை என்றும், காயமடைந்தவர்களது எண்ணிக்கை 1,500 என்றும் பதிவுகள் கூறுகின்றன.

——————————————————————– –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 28-12-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.