ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது பதவி நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்ட சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் சில வாரங்களிலேயே பதவி விலகியுள்ளார்.
கடந்த ஒக்டோபா் மாதத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின் அப்தல்லா ஹம்தோக் வீட்டுச் காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளுக்குப் பின் மீண்டும் பிரதமரானார்.
எனினும் ராணுவத்தின் தலையீடு இல்லாமல் மீண்டும் முற்றிலும் குடிமக்கள் மட்டுமே இருக்கும் அரசு அமைய வேண்டும் சூடான் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்பதவி விலகியுள்ள அப்தல்லா ஹம்தோக் இந்த நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க முயன்ற போதும் தன்னால் அதனைத் தடுக்க முடியவில்லை என தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு, சூடானை நீண்ட காலம் ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, ஓர் இடைக்கால அரசு குடிமைத் தலைவர்களைக் கொண்டு நிறுவப்பட்டது. அப்போது முதலே குடிமை அரசியல்தலைவர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது