காங்கேசன்துறை காவல்துறைப் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவக் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இராணுவ காவல்துறையினரினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை தெல்லிப்பழை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன. அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள இந்து ஆலயங்களில் திருடப்பட்ட விக்கிரகங்களும் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் உப காவல்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கொழும்புக்கு விரைந்த உப காவல்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20இற்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர்.
அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் இராணுவ காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் 42 வயதுடைய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டு தெல்லிப்பழை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த இராணுவ சிப்பாயியிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.