வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டில் இருந்து ஒருவர் மலேரியா தொற்றுடன் இங்கே வந்தால் உள்ளூரிலே இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எவ்வாறு இந்நோயினை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். குறிப்பாக மலேரியா உள்ள நாடுகளுக்கு செல்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.
2012ஆம் ஆண்டுக்கு பின்னர் நான்கு வருடங்கள் மலேரியா தொற்றாளர்கள் இல்லாமல் தக்க வைத்துக் கொண்ட படியால் 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை உலர் வலயப் பிரதேசங்களில் மலேரியா நோயை பரப்பக்கூடிய அனோபிலிஸ் காணப்படுகின்றது. தென்பகுதியை பொறுத்தவரை மலேரியா நோயை ஏற்படுத்தக்கூடிய நுளம்புகள் காணப்படவில்லை.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவை பரப்ப கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது
யாழ் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்பு மூலம் எமது பகுதியிலும் மலேரியா பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது மலேரியாவை பரப்பக்கூடியநுளம்புகள் எங்களுடைய பிரதேசங்களில் தாராளமாக இருக்கின்றன
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் இதைவிட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற மலேரியா பரவல் உள்ள நாடுகளுக்குச் செல்பவர்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். அங்கு சென்று திரும்பும் பொழுது எந்தவித அறிகுறியும் இன்றி மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உண்டு.
இது ஏற்படாமல் தடுக்க தடுப்பு மாத்திரைகள் காணப்படுகின்றன. அவற்றை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளமுடியும்.
வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு,அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதியில், நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக குளுமையான பயன்படுத்த வேண்டும். இதை பின்பற்றினால் மலேரியா தொற்று ஏற்படாது. அதைமீறி மலேரியா தொற்று ஏற்பட்டாலும் நோய் தாக்கம் தீவிரமாக இருக்காது.
இவ்வாறான நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த பின்னர் ஒரு வருட காலப்பகுதிக்கு போதனா வைத்தியசாலை,பொது வைத்தியசாலை , ஆதார வைத்தியசாலை போன்றனவற்றுக்கு சென்று மலேரியா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
மலேரியா நோய் என இனங்காணப்பட்டவர்கள் மூன்று வருட காலத்திற்கு இரத்ததானம் செய்யக்கூடாது.எனவே நுளம்புகள் பரவாது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.