வளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு வைத்திய நிபுணர் கோபிசங்கர் தெரிவித்தார்.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வளைந்த பாதங்களுடைய குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்குக்கு பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வளைபாதம் என்பது பெண்களை விட ஆண்களையே பாதிக்கின்றது. இவ்வாறான நோயுள்ளவர்களில் 50 -60 வீதமானவர்கள் குதிக்காலில் வளைபாதத்தை கொண்டவர்கள்.
இதற்கான சிகிச்சை முறைகள் இருந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் சிறந்த சிகிச்சை முறைகளை வழங்கி கொண்டிருக்கிறோம்.
இந்த சிகிச்சை முறையானது இலங்கையில் சில வைத்தியசாலைகளிலேயே காணப்படுவதுடன் அவர்களுடன் கைகோர்த்து இந்த சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இதில் முக்கியமாக குழந்தைகளும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வும் இல்லாததால் சரியான சிகிச்சை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. உடனடியாக அந்த குழந்தைகளை இனங்கண்டு சிகிச்சைகளை ஆரம்பிக்கும் இடத்தில் நூறு வீதம் குணப்படுத்தக்கூடிய நிலைமை உள்ளது.
இதற்கான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக யாழ் போதனா வைத்தியசாலையின் எலும்பு முறிவு பிரிவில் வழங்கப்படுகின்றது.சிகிச்சை வழங்கும் அவர்களுக்கும் நாங்கள் பயிற்சி பட்டறைகளை நடத்துகின்றோம்.
இவ்வாறான குழந்தைகளை கண்டறிந்து வாரத்துக்கு ஒருமுறை சிறிய சத்திரசிகிச்சை செய்து மீண்டும் அவை வராமல் தடுப்பதோடு நூறுவீதம் குணமடைய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கும் இதைப்பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு சர்வதேச தரத்திலான வைத்திய முறைகளை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
இவ்வாறான நோய்நிலையில் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாம் அல்லது நேரடியாக எம்மை அணுகலாம் என்றார்.