Home இலங்கை இலங்கையில் இல்மனைற் அகழ்வு! சூழலைப் பாதிக்கிறதா?! ந.லோகதயாளன்.

இலங்கையில் இல்மனைற் அகழ்வு! சூழலைப் பாதிக்கிறதா?! ந.லோகதயாளன்.

by admin

இலங்கையின் பெரும் பொருளாதாரத்தை ஈட்டும் நோக்கில் இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் என்னும் கணியவளங்களை திரட்டும் அரச நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முகத்துவாரம், செம்மலை ஆகிய இடங்களின் கடற்கரைப் பகுதிகளில் இருந்து விரைவில் இல்மனைற் அகழ்வதற்கான பணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இல்மனைற் என்னும் கனியவளமானது சோளர் (Solar) என்னும் சூரிய சக்தியில் மின்சாரத்தை பெறுகின்ற கலத்தை உருவாக்குவது உள்ளிட்ட பல தொழில் பாட்டிற்கும் அதன் இறுதிப் பகுதி வண்ணப்பூச்சு உற்பத்திக்கும் பயன்படுகின்ற ஓர் முக்கிய கனியவளமாகும். இந்த கனியவளம்
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபணத்தின் மூலம் பெறப்பட்டாலும் இல்மனைற்றில் இருந்து சோளர், மாபிள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இலங்கையில் பெரிய அளவில் ஆரம்பிக்கப்படாமையினால் இன்றுவரை சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிற்கே இல்மனைற் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

திருமலையில் இயங்கும் இல்மனைற் தொழிற்சாலை.

இல்மனைற்றைப் பெறும் இலங்கை கனியப்பொருள் மணல் கூட்டுத் தாபனத்தின் தொழிற்சாலை ( LANKA MINERAL SANDS LIMITED) ஒன்று 1972 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை கிராமத்தில் இயங்குகின்றது. இந்தத் தொழிற்சாலைக்கு இல்மனைற் பெறக்கூடிய மணல் தற்போது அற்றுபோகும் அறிகுறிகள் காணப்படுகின்றன. இதனால் கனியவள கூட்டுத் தாபனம் 18 (2004 இல்) ஆண்டுகளிற்கு முன்பே வேறு இடங்களில் இதைத் தேடியபோது முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முகத்துவாரம், செம்மலை ஆகிய இடங்களின் கடற்கரையில் இல்மனைற் மணல் இருப்பதாகக் கண்டறிந்தது. உண்மையில் இலங்கையில் 12 இடங்களில் இல்மனைற் இருப்பதாக கண்டறியப்பட்டது என்பதை 1980 இல் கேரத் தற எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் 3 இடங்கள் மட்டுமே வடக்கு கிழக்கில் இருக்கின்றன. மிகுதி 9 இடங்களும் தெற்கிலேயே உள்ளன என்பதும் இங்க கவனிக்கத்தக்கது.

ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முகத்துவாரம், செம்மலை ஆகியபிரதேசங்களில் மணல் அகழ்விற்கான ஆரம்பகட்ட பணிகளை
2006ஆம் ஆண்டுமுதல் திணைக்களம் ஆரம்பித்திருந்ததை அறிய முடிந்தது.

இதற்காக கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையான கடற்கரைப் பிரதேசத்தில் 6 கிலோ மீற்றர் நீளமும் கருநாட்டுக்கேணியில் நாயாறு முதல் செம்மலை வரையான 04 கிலோ மீற்றர் நீளமும் என 10 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பகுதிகள் இல்மனைற் மணல் அகழ்வு மேற்கொள்ள உகந்தவையாக திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்டது. இங்கே சுமார் 25 மீற்றர் அகலத்திற்குள் மணல் தோண்டப்படுவதற்கான பணிகள் உடன் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் 12 இடங்கள் இருக்கும்போது தொடர்ந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டும் இந்த மண் அகழ்வு திட்டமிடப்படுவதையும், குறித்த இந்த முல்லைத்தீவுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இந்த மண் அகழ்வுக்காக அரசு கையகப்படுத்தியதையும் மக்கள் விசனத்துடன் நோக்குகின்றனர். அதே நேரம் இந்த மண் அகழ்வு ஏற்படுத்தப்போகும் சூழல் பாதிப்புகள் பற்றிய அக்கறையும் சூழலியலாளர்கள் முன்வைக்கின்றனர். இந்த மண் அகழ்விற்காக ஆரம்ப கட்ட நடவடிக்கையின்போது மாவட்ட நிர்வாகத்தினால் போடப்பட்ட சில கட்டுப்பாடுகள் காரணமாக பாரிய அளவிலான மணல் அகழ்வு மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன் மாவட்ட மட்டத்தில் மீனவ அமைப்புக்களும், நில உரிமையாளர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இதற்கான பணிகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் இப் பகுதியில் மணல் எடுக்கப்படவுள்ள பகுதியான கடற்கரைப் பகுதி அரச நிலம் என்ற வகையில் இது தொடர்பான சாத்தியப்பாட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளரிற்கு பணிக்கப்பட்டதால் அவர் சில பரிந்துரைகளைச் செய்திருந்தார். அதில் பிரதானமாகச் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

பிரதேச செயலாளரின் பரிந்துரைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் முக்கிய 7 விடயங்கள் அடங்கிய பரிந்துரை ஒன்றினை 2017ம் ஆண்டு சமர்ப்பித்திருந்தார். அதன் பிரகாரம் இப் பகுதியில் மணல் அகழப்படுமாயின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச் சூழலிற்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதனை உறுதி செய்ய வேண்டும் அத்துடன் ஆயிரக் கணக்கான தொன் மணல் அகழப்படும்போது அதனால் ஏற்படும் பாரிய குழிகளில் குறிப்பிட்டளவை மூடிய பின்னரே ஏனைய மணல் அகழ்வினைச் செய்யவேண்டும். அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஏனெனில் இப்பிரதேசம் மீன்பிடி மக்களில் குறிப்பாக கரைவலை இழுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களை அதிகமாகக் கொண்டது. இந்த மண் அகழ்வினால் அது தடைப்படும். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். என்ற இக்கருத்து முன்வைக்கப்பட்டபோது ஆண்டின் 6 அல்லது 7 மாதங்களிலேயே கரைவலைத் தொழில் நடைபெறும். அந்தக்காலங்களைத் தவிர்த்து, கரைவலை தொழில் இடம்பெறாத காலத்தில் மணல் அகழப்படும் என நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் சுற்றுச் சூழல் பாதிப்பைதடுப்பது எவ்வாறு என்பதற்கு யாரிடமும் விடைகள் இல்லை. ஏனெல் மண் அகழப்படும்போது கரையோரத்தின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
இதுபற்றி யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளையிடம் கேட்டபோது,

‘கடற்கரைகளில் மணல் படிவதனால் அக்கரையோரம் வளர்கிறது. அது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் ஒரு இயற்கையான செயற்பாடாகும். ஆனால் கனிய வளத்தின் பெயரில் மணல் அகழ்வதனால் நிச்சயமாக அந்த வளர்ச்சி தடைப்படும். வளர்சி தடைப்படுவதோடு அயலில் உள்ள விவசாய நிலம் உவர்நிலமாக மாறும், பயிரச் செய்கை நிலங்களின் தன்மை மாறுபடும். அத்துடன் கண்டல்தாவரங்கள் அழிக்கப்படுவதுடன் அது மீள உருவாகும் தன்மையும் நீண்ட காலத்திற்கு தடைப்படும். இதன் காரணமாக அதனை அண்மித்த பகுதிகளில் மக்கள் குடியமரவோ அல்லது விவசாய செய்கையில் ஈடுபடவோ முடியாத நிலை ஏற்படும்’ என்றார்.

50 ஆண்டு காலமாக புல்மோட்டையில் நடைபெற்ற மண் அகழ்வில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கரையோர தாவரம் அழிந்த நிலையில் உள்ளமையை இங்கு குறிப்பிடமுடியும்.

அதே நேரம், இந்த மண் அகழ்வின்போதான நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட 25 மீற்றர் அகலம் மட்டுமல்ல அதற்கும் மேலான நிலப்பரப்பு தேவைப்படுகிறது. மண்ணகழ்வு 25 மீற்றர் என்று குறிப்பிட்டாலும் நீர் தடுப்பு, வாகன போக்கு வரத்து என்று 100 மீற்றறாவது தேவைப்படும். இதுபற்றி கரையோரப் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு மாகாண பொறியிலாளர் துளசிதாசன் கூறும்போது, ‘இந்தப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டுமுதல் மணல் அகழ்விற்காக, கடற்கரையில் இருந்து 100 மீற்றர் அகலப் பிரதேசம் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் இந்த அனுமதி புதுப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில் தாவரங்கள் மரங்கள் அழிவடைந்தால் அடுத்த ஆண்டே புதிதாக அவை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பெயரிலேயே வருடா வருடம் எமது அனுமதி புதுப்பிக்கப்படும். அதன்போது அங்கே ஏற்படும் குறைநிறைகள் கருத்தில் எடுக்கப்படும் இந்த ஏற்பாடுகள் எல்லாம் பொது மக்களின் அபிப்பிராயம், எமது திணைக்களம், சுற்றுச் சூழல் திணைக்களம் ஆகியவற்றின் கருத்துக்களை உள்வாங்கியே செய்யப்படுகிறது’ என்கிறார்.

தற்போது கொக்குளாய் கிழக்கில் முல்லைத்தீவு கொக்குளாய் பிரதான வீதியில் தனியாருக்குச் சொந்தமான கம்பித்தறை என்னும் பெயரை உடைய 45 ஏக்கர் நிலம் இந்த தொழிற்சாலையை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலத்திற்கு உரித்துடைய 18 உரிமையாளர்களின் அனுமதியோ அல்லது சம்மதமோ இன்றி கூட்டுத்தாபனம் அரச வர்த்தமானி மூலம் சுவீகரித்து பாதுகாப்பு வேலியையும் அமைத்துள்ளது. இந்த 18 உரிமையாளர்களில் ஒருவரான ஜெயசங்கர் சுகந்தினி 6 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரி. ‘2012 ஆம் ஆண்டு மீள் குடியேறிய காலம் தொட்டு எமது வாழ்வாதாரத்திற்கு இந்த நிலத்தை நம்பியே இருந்தோம். 2019ஆம் ஆண்டு காலபோகம் வரை இந்த நிலத்தில் விவசாயம் மேற்கொண்டே நாம் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நானும் எனது கணவரும் கூலி வேலைக்குச் செல்லும் அவலத்தில் உள்ளோம். எமது சம்மதம் இன்றி எமது நிலத்தை அபகரிக்கப்பட்டு சுற்றுச் சூழல் அழிக்கப்பட்டுள்ளது.’ என்கிறார். 2019 வரை வயல் நிலங்களாக இருந்து பல்வகைமை உயிரினங்களையும் வாழ வைத்த நிலப்பரப்பில் இனி மண்புழுகூட இருக்காத அளவிற்கு சூழல் மாற்றப்படவுள்ளது. இத்தகைய இல்மனைற் அகழ்வும் அதைப்பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைப்பும் நிலத்தையும் நீரையும் வளமற்றதாக்குகின்றது. இதுபற்றி கடல்சார் பல்கலைக்கழக பேராசிரியர் சூசைதாசன் கூறுகையில்,


‘கடற் கரையில் மணல் அகழ்வதானால் அகழப்படும் பிரதேசத்திற்குள் நீர் புகாதவாறு தடுப்பை ஏற்படுத்தியே மணல் அகழ்வில் ஈடுபட வேண்டும். இதனால் அப் பகுதியில் அகழப்படும் குழிகள் இயற்கையாகவே உடனடியாக நிரவுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படாது. அத்தோடு அப் பகுதியில் இருக்கின்ற இயற்கை சுற்றுச் சூழலிற்கு சாதகமான விடயங்கள் அகற்றப்பட்டே அகழ்வுப் பணி மேற்கொள்ள வேண்டும். இதனால் சுற்றுச் சூழலிற்கு ஏற்படும் பாதிப்பும் மீள உருவாக்காப்பட மாட்டாது என்பதோடு அப்பகுதி அதிக கொதிநிலைக்கு உட்படும். அதாவது வெப்பம் அதிகரிப்பதால் அந்த திசைகளை நாடும் மீன்களும் திசைமாறும். இது கடலின் பல்வகைமையை பாதிக்கும் விடயம்தான். அத்துடன் நீர் தடுப்பு அமைப்பதனால் மழை நீரும் கடலுடன் கலக்கமுடியாத நிலையில் வெள்ளநீர் பாதிப்பும் விவசாய பாதிப்பும் ஏற்பட வழியுண்டு.’ என்று கூறுகிறார்.

இத்தகைய சூழலியல் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாமல் இத்திட்டம் தொடங்கப்பட்டதா? அவ்வாறு பிரச்சினைகளை இனங்கண்டிருந்தாலும் மாற்றாக முன்வைக்கப்பட்டவை எவை? இவை இன்னும் கேள்விகளாவே உள்ளன. இல்மனைற் அகழ்விற்காக நிலத்தில் இருந்து 4 அடி ஆழம்வரைதான் புல்மோட்டையில் அகழப்பட்டதாக உத்தியோக பூர்வமாக கூறப்படுகிறது. நேரடியாகப் பார்த்தபோது நிலைமை அவ்வாறிருக்கவில்லை. தோண்டப்பட்ட குழிகள் 6 தொடக்கம் 7 அடிவரை உள்ளது. அந்தக் குழிகளில் பல வருடக்கணக்காக மூடப்படாமலே உள்ளன. இல்மனைற் பிரித்தெடுக்கபட்ட பின் எஞ்சும் மணலினால் அந்தக்குழிகளை மூடமுடியும். அது பல இடத்தில் இடம்பெறாதமையே ஊழலின் ஆபத்தை காட்டுகின்றது.

சூழலின் நிலப்பாதிப்பு இந்த நிலையில் இருக்கிறதென்றால், இந்த மண்ணைப்பிரித்தெடுக்கும் தொழிற்சாலைச் செயற்பாடுகள் சூழலுக்கு மேலும் ஊறுவிளைவிக்கக் கூடியன. இது பற்றி அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியரான துஸ்யந்தி கூல் பின்வருமாறு கூறினார்.

‘கனிப்பொருள்மண்வளத்தை மதிப்பிட்டு 1979 இல் வெளிவந்த அறிக்கையில் உலகப் புகழ் பெற்ற புல்மோட்டையைத் தவிர நாயாறு, கொடுவாக்காட்டு மலை, தாவில்காடு, வெருகல், வாகரை, திருக்கோயில் ஆகிய இடங்களிலுள்ள இல்மனைட் வளத்தை நல்ல தரமுள்ளது என்று கூறியள்ளது. இங்கு 4 லட்சத்து 75 ஆயிரம் தொடக்கம் 7 லட்சம் தொன் டைட்டேனிய கனியுப்பான ரூட்டைல, 3 லட்சத்து 50 ஆயிரம் தொடக்கம் 5 லட்சம் தொன் சேர்க்கோன் கனியுப்பு மேலும் 2 தொடக்கம் 4 ட்ரிலியன் தொன்கள் இல்மனைட்டும் உள்ளதாக வெளியார் கம்பனிகளின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. அடுத்து இத் திணைக்களம்; கற்பிட்டி, மன்னாரையும் காட்டியுள்ளது. அதே நேரம் தெற்கில் தொந்திரா, டிக்வளை, கோதவாயா, கிரிந்த மேலும் அம்பலாந்தோட்டையில் இல்மனைட் செறிவுகுறைந்த மண்ணுண்டு என்கிறது.


இல்மனைற் மணல் அகழப்பட்டு பழைய முறையிலான காந்தப்பிரித்தெடுப்பு முறையால் இல்மனைட் பிரித்தெடுக்கப்பட்டு பெறப்படுகிறது. அதுமட்டுமல்ல இல்மனைட்டின் இரும்பு, மட்டும் டைட்டேனியத்தை வேறாக்குவதற்கு மின்சார உருக்கிப் பிரித்தல் முறை பாவிக்கப் படுகிறது. இம்முறையால் இன்று தட்டுப் பாட்டிலுள்ள டைட்டேனியம் கசடாகப் பெறப்படும். இக்கசட்டினால் பாதிப்புக் குறைவென்று கூறப்பட்டாலும், செய்முறையில் இதனால் அதிக சாம்பல் விளையும். இல்மனைட்டை இவ்விதத்தில் பதப்படுத்தும் தொழில் முறை நச்சு வாயுவாகிய காபன் ஓரொட்சைட்டை வெளிவிடும் பிற நாடுகளில் இவ்வாயு நன்கு எரிக்கப்பட்டு காபனீரொக்சைட்டாக காற்றில் விடப்படும் அல்லது எரிபொருளான மீதேனுடன் கலக்கப்பட்டு தொழிற்சாலை எரிபொருள் கலவையாகும். ஏனெனில்; காபனிரொக்சைட்டு புவி வெப்பமேறலுக்குப் பெரிய காரணியாக உள்ளது. முன்னேற்றமடைந்த நாடுகளில் இது குறைக்கப் படுவதற்கான ஒப்பந்தங்கள் உள்ளன.’ என பேராசிரியர் துஸ்யந்தி கூல் தெரிவிக்கின்றார்.

நாம் மணல் அகழ்வு பற்றி கதைத்துக்கொண்டிருக்கும்போது மணலில் இருந்து இல்மனைற்றைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை நடவடிக்கைகள் எவ்வளவு தூரத்திற்கு சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆழமாக பார்ப்பதில்லை. வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலக நாடாக நாம் இருப்பதும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் இத்தகைய தொழிற்சாலைகளை உருவாக்குவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். நாட்டின் அபிவிருத்திக்கு தொழிற்சாலைகளும் வளங்கள் விற்பனையும் தேவைதான். ஆனால் அவற்றை சரியான முறையில் முன்னெடுக்கின்றார்களா? என்பதுதான் எமது கேள்வி. அரசியல் பொருளாதாரக் காரணங்களால் மக்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. இயற்கையின் பல்வகைமை குலைக்கப்படுகிறது. அது மீளக் கட்டியெழுப்பப்படுவதில்லை. ஏன்? இதுவும் கேள்வியாவே உள்ளது. இத்தகைய பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளத் தயாரா? ஏனெனில் முல்லைத்தீவில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் இருந்து (2022) பெப்ரவரி மாதம் முதல் மணல் எடுக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

இந்த அச்சங்கள் பற்றி தற்போது புல்மோட்டையில் இயங்கும் இல்மனைற் தொழிற்சாலையின் பிரதிப் பொது முகாமையாளராக 30 ஆண்டுகள் பணியாற்றும் ஞானேஸ்வரன் இப்படிக் கூறுகிறார்.

தற்போது வருடம் ஒன்றிற்கு அண்ணளவாக 40 ஆயிரம் தொன் இல்மனைற் உற்பத்தி பெறப்படுகின்றது. இது சர்வதேச சந்தையில் ஒரு தொன் 240 டொலராகவும், றூட்டல்
2,500 தொன் உற்பத்தி கிடைக்கும் இது 1,700 டொலராகவும், சேப்பொன்
1,200 தொன் கிடைக்கும் இது 1,900 டொலராகவும் உள்ளது. தற்போது தொழிற்சாலையில்
565 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தளவு கனியத்தைப் பெறுவதற்கு வருடம்
2 லட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் மணலைப் பெற வேண்டும். கனியத்தை பெற்ற பின்பு வரும் மணலைக் கொண்டு மணல் எடுத்த கிடங்குகளை மூடுகின்றோம். தற்போது புல்மோட்டை முதல் கும்புறுபிட்டி வரையான பகுதியில் மணல் எடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் ஓர் தனியான தொழிற்சாலை விரைவில் அமைக்கபடும் அதற்காக அந்த மாவட்ட இளைஞர்கள் 300 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். இதனைத் தவிர ஏற்றி இறக்கல் உழவு இயந்திரங்கள் முதல் தற்காலிக பணியாளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தே நியமிக்கப்படுவார்கள்.

இதேநேரம் தொழிற்சாலைக்காக கையகப் படுத்திய நிலத்திற்காக முற்பணமாக 20 லட்சம் கட்டியுள்ளோம் ஏனையவை எஞ்சிய பணிகளை பிரதேச செயலகம் நிறைவு செய்து வழங்கும்போது முழுப் பணமும் வழங்குவோம்.

அதேபோல் கடற்கரையில் அதிக ஆழத்திற்கு மணல் அகழப்பட மாட்டாது அரை அடிமுதல் ஒரு அடிக்கும் இடைப்பட்ட மணலே அகழப்படும் . இதனை உறுதி செய்ய மனித வலு மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. புல்மோட்டையில் 4 அடி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.’ என்று எமது ஒட்டுமொத்த பிரச்சினைகளும் கவனிக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டாலும், சில நேரடிக் காட்சிகள் இக்கருத்துக்கள் அலுவலக கடிதங்களில் மட்டுமே உள்ளது என்றே கூறுகிறது.

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More