டென்மார்க் வெளிநாட்டு உளவுப் பிரிவின் தலைவர் லார்ஸ் ஃபின்சென் (Lars Findsen) கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பியநாடுகளின் தலைவர்களது ரகசிய தொடர்பாடல்கள் ஒற்றுக் கேட்கப்பட்டு அவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகத்துக்குக் (U.S. National Security Agency) கசியவிடப்பட்டன என்று குற்றம் சாட்டப்படுகின்ற விவகாரம் தொடர்பாகவே அவர் நீதிவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் என நம்பப்படுகிறது.
தனிநபர்கள் தொடர்பான ரகசிய தகவல்களைக் கசிய விட்டனர் என்ற குற்றச் சாட்டில் லார் ஃபின்சென் உட்பட புலனாய்வுஅதிகாரிகள் நால்வர் கடந்த ஆண்டுஓகஸ்ட் முதல் ரகசியமான முறையில் விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் லார் ஃபின்சென் தவிர்ந்த ஏனையோர் விடுவிக்கப்பட அவர் மீது மட்டும்தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்ட தகவல் நேற்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக செய்தி வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்தே நேற்று டிஆர் செய்திச் சேவை (public broadcaster DR) உட்பட அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் அதனைப் பகிரங்கமாக்கியுள்ளன.
நான்கு உளவுத்துறை அதிகாரிகள் “மிகவும் இரகசியமான தகவல்களை வழங்கியதன் மூலம்” தேசத்துரோகத்தை உள்ளடக்கிய தண்டனைச் சட்டத்தின் ஒரு பகுதியை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற தகவலை டேனிஷ் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சேவை (PET) முதல் முறையாக உறுதிப்படுத்திஉள்ளது.
“மிக ரகசியமானவை” என்று கருதப்படுகின்ற அத் தகவல்கள் டென்மார்க்,மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ,நேட்டோ அமைப்பு நாடுகளுக்குக் கடும் சேதங்களை உண்டாக்கக் கூடியவை என்றும் அது தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது ஐரோப்பியக் கூட்டாளி நாடுகளின் தலைவர்களை டென்மார்க்கின் உதவியுடன் ரகசியமாக உளவு பார்த்தது என்ற தகவல் கடந்த ஆண்டில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவீடன்போன்ற நாடுகளின் உயர் மட்டஅரசியல்தலைவர்களது தொலைபேசி, இணையம், குறுந்தகவல்கள் என்பவற்றைஅமெரிக்கத் தேசிய பாதுகாப்பு முகவரகம் ரகசியமாகச் சேகரித்ததுஎன்ற தகவல் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அதிர்வலைகளை உருவாக்கியது.
முன்னாள் சான்சிலர் மெர்கல், ஜேர்மனியின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் தகவல் பரிமாற்றங்களை அமெரிக்கா ரகசியமாக அணுகியது என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. இது குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்த அங்கெலா மெர்கல், அதிபர் மக்ரோன் ஆகியோர் அமெரிக்காவும் டென்மார்க்கும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கேட்டிருந்தனர்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான டென்மார்க், ஏனைய ஐரோப்பியநாடுகளான சுவீடன், நோர்வே, ஜேர்மனி,நெதர்லாந்து, பிாித்தானியா ஆகியவற்றுக்கு இடையிலான கடலடிக் கேபிள் (underwater internet cables) தொடர்புக் கட்டமைப்பு மையங்களை இணைக் கின்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.அந்தக் கேபிள்கள் ஊடாகவே ரகசியங்களை அமெரிக்கா பெற்றிருக்கிறது எனநம்பப்படுகிறது.
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்