ஹொங்கொங்கில் வளர்ப்பு எலி இனங்களில் ஒன்றாகிய hamsters எனப்படும் வெள்ளெலிகள் சிலவற்றில் ‘டெல்ரா’ வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்கின்ற கடை ஒன்றிலேயே 11 வெள்ளெலிகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
கடையில் வேலை செய்கின்ற ஒருவருக்கும் அது தொற்றியுள்ளது. கொவிட் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்குப் பரவுவதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து வெள்ளெலிகளை இறக்குமதி செய்வதைக் ஹொங்கொங் அரசு இடைநிறுத்தியிருக்கிறது.
கடந்த டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதிக்குப் பின்னர் வாங்கிய வெள்ளெலிகளை மீள ஒப்படைக்குமாறு அவற்றை விற்பனை செய்வோரையும் வளர்ப்பாளர்களையும் அரசு கேட்டிருக்கிறது.கடைகளில் எலிகளைச் சோதனை செய்வதையும் அப்புறப்படுத்துவதையும்”மனிதாபிமானத்துடன்” மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர்.
வெள்ளெலிகள் உட்பட கடைகளில் விற்பனை செய்யப்படவிருந்த சுமார் இரண்டாயிரம் சிறு விலங்குகள் கருணைக் கொலை (euthanisation) செய்யப்படவுள்ளன என்று விவசாய,மீன்வளப் பாதுகாப்பு இயக்குநர் டாக்டர் லியுங் சியு-ஃபை அறிவித்திருக்கிறார்.
இத் தகவலை “சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்” (South China morning Post)செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.’லிட்டில் பொஸ்’ (Little Boss) என்ற வீட்டுவளர்ப்பு விலங்கு விற்கும் கடையில் பணிபுரிகின்ற 26 வயதுப் பெண் ஒருவருக்கே எலிகளில் இருந்து டெல்ரா பரவிஇருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஹொங்கொங்கில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்ராத் தொற்றுக்கு இலக்கான முதல் நபர் இவராவார். கடைக்கு வந்து சென்ற வேறு இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளெலிகளில் இருந்து பரவிய கிருமி டெல்ராவின் மாறுபாடடைந்த புதிய வடிவமாக இருக்குமா என்பதை அறிவதற்கு தொற்றுநோயியல் நிபுணர்கள் முயன்றுவருகின்றனர்.
இதேவேளை, சரியாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே எலிகளைக் கூண்டோடு அழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அங்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.விலங்குகளது உரிமை பேணுவோர் அதற்கு எதிராக இணைய வழிகளில் கையொப்பங்கள் சேகரிக்கின்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்னர் டென்மார்க் நாட்டில் சிறிய மிங் விலங்குகளில் தொற்றுக்கண்டறியப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான அந்தச் சிறிய விலங்குகளைக்கொன்று புதைப்பதற்கு அந்நாட்டின்அரசு எடுத்த தீர்மானம் பின்னர் பிரதமருக்குக் கடும் நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.18-01-2022