வெற்றிடமாக இருந்த ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காமினி செனரத், தனது கடமைகளை இன்று (19.01.22) ஏற்றுக்கொண்டார். அவர், பிரதமரின் செயலாளராக கடமையாற்றியவர்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த, கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
அரச சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியான செனரத், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை அதிகாரியாகவும் மேலதிக செயலாளராகவும் இருந்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டப்படிப்பைப் நிறைவு செய்த காமினி செனரத் 1984 இல் இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) நுழைந்தார்.
பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரான அனுர திஸாநாயக்க, அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர், நாளை முதல் பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.