இலங்கை பிரதான செய்திகள்

சமஷ்டியே தீர்வு! சித்தார்த்தன். “தமிழ் மக்கள் ஜனாதிபதியால் அவமதிப்பு” – சுமந்திரன்.

தமிழ் பகுதிகளில், தமிழ் மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும், அதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளாகும். அதனை ஓரங்கட்டிவிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் தெரிவித்தார்.

நாடா ளுமன்றத்தில் நேற்று (19.01.22) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பாக எதனையும் கூறாது விடுபட்டுள்ளது. அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எமது கொள்கைகள் என்பது எமது மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பாதாகும். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் எமது மக்கள் தமிழ் கட்சிகளுக்கு ஓர் ஆணையை வழங்கி வந்துள்ளனர்.

தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு, அதுவும் சமஷ்டி முறைமையில் அந்த தீர்வு அமைய வேண்டும் எனவும் மிகத் தெளிவாக கூறிவந்துள்ளனர். அதனை ஓரங்கட்ட முடியாது.

13 ஆம் திருத்தத்தை இல்லாது செய்ய பல சதிகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே தான் இந்தியாவின் ஆதரவை கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

13 ஆம் திருத்தம் எமக்கு இறுதித் தீர்வு அல்ல, ஆனால் சமஷ்டி தீர்வு கிடைக்கும் வரையில் 13 ஆம் திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திக்கொண்டுள்ளோம். இது இந்த நாட்டிற்கு எதிரான செயற்பாடு அல்ல, 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கும் கடமை உள்ளது.

வடக்கு, கிழக்குக்கு அபிவிருத்தி தேவையான ஒன்றாகும், நிலைபேறான அபிவிருத்தியின் மூலமே நாட்டினை கட்டியெழுப்ப முடியும். ஆனால் நியாமான தீர்வு இல்லாத காரணத்தினால் தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது போயுள்ளது.

ஆகவே தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட்டால் தான் நாட்டில் நியாயமான அபிவிருத்தியையும் காண முடியும். பண்டா -செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இந்த நாட்டில் பல போராட்டங்களுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்.

அதில் பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்துள்ளோம். ஆகவே எமது கொள்கையை காப்பாற்ற இவ்வளவு தியாகங்களை செய்துவிட்டு இன்று ஓரங்கட்டுவது நடக்க முடியாத விடயமாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர சமாதனம் ஏற்படவில்லை. யுத்த முடிவு சமாதானம் அல்ல. யுத்தம் ஏற்பட ஏதுவான காரணிகள் இன்னமும் அவ்வாறே உள்ளது. ஆகவே அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வெறுமனே அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதன் மூலமாக மக்களுக்கு பிரயோசனமாக அமையப்போவதில்லை. ஆகவே தான் எமது பகுதிகளில் எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.

இந்த நாட்டில் உள்ள அரசியல் அமைப்பில் உள்ள ஒரு சரத்தை அமுல்படுத்துவதற்கு ஓர் அரசாங்கம் தயங்குவதை இந்த நாட்டில் தான் அவதானிக்க முடியும். இப்போதுள்ள மாகாண சபையில் அதிகார பகிர்வு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்கள் ஜனாதிபதியால்அவமதிப்பு” – எம்.எ.சுமந்திரன்.

நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில், ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நேற்று (19.01.22) உரையாற்றிய போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததானது,

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் நடத்த அதிக நேரம் வேண்டும் என இறுதியாக கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாம் வாதிட்டோம். ஜனாதிபதியின் உரை மீது அதிக நேரம் விவாதிக்க நேரிடும் என கருதினோம். ஆனால் ஜனாதிபதியின் உரையை கேட்ட பின்னர், நாம் அதிக நேரம் கேட்டு வாக்குவாதப்பட்டது வீணானது என்றே கருதுகின்றேன்.

கொள்கை என ஒன்றுமே இல்லாத உரை என்றே அவரது உரையினை கூற வேண்டும். அவரது உரையில் பிரச்சினைகள் பற்றி கூறிய போதிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதனையும் கூறவில்லை.

அவரது உரையில் ஒரு சில விடயங்களை கூறினார், குறிப்பாக ‘ மிக மோசமான நாணய நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளோம், பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் நாம் உள்ளோம், இதற்கான தீர்வுகளை காண கடந்தகால அரசாங்கங்கள் தோல்விகண்டுள்ளதாக’ கூறினார். இறுதியாக இருந்த அரசாங்கத்தை மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களையும் ஜனாதிபதி குறை கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களில் இரண்டு அரசாங்கங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தலைமை தாங்கினார். ஆகவே இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் காரணம் என்பதையும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளது என்பதையே ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரச்சினையை இனங்கண்டு அதனை மஹிந்த ராஜபக் ஷவின் தோளில் சுமத்திவிட்டுள்ளாரே தவிர இந்த நெருக்கடிக்கு தீர்வு என்ன, எந்த பாதையில் பயணித்து இந்த நெருக்கடிகளில் இருந்து மீளப்போகின்றோம் என்ற தீர்வுத்திட்டங்களையும் முன்வைக்க தவறியுள்ளார்.

அவரது உரையினை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில குறுஞ்செய்திகள் வெளிவந்தன, அதனை பார்க்கும்போது மேலும் 500 மில்லியன் டொலர்கள் எமது பிச்சை பாத்திரத்தில் போடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதுவொரு நாளாந்த செயற்பாடாக மாறிவிட்டது.

கையில் பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டு யாரும் பிச்சையிடுவார்களா என காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று எமது நிலையாக மாறியுள்ளது. அடுத்த கட்டத்தில் என்ன செய்யப்போகின்றோம் என்பது தெரியாத நிலைமை உருவாகியுள்ளது.

அவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் உரையில் எதுவுமே இல்லாது ஒரு சில காரணிகளை கூறிச் சென்றுள்ளார்.

அதேபோல் இந்த பாராளுமன்றத்தில் வெவ்வேறு மக்களின் பிரதிநிதிகள் வெவ்வேறு ஆணையுடன் உள்ளனர் என்பதை கூறியுள்ள போதிலும் வடக்கு கிழக்கு விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார்.

எமது மக்கள் சுய நிர்ணயம், சுய ஆட்சி, ஆளுகையை பகிர்ந்துகொள்ளும் ஆட்சி என்பவற்றையே கேட்டு நிற்கின்றனர். ஆனால் வெறுமனே வசதிகளை மட்டும் எமது மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதனை செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுவதும், நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு எனவும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு இதுவென்பதையும் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தமது சித்தார்ந்தத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சித்தார்ந்தம் என்பது எமது கொள்கையாகும், அது எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணையாகும், அதனை ஓரமாக வைத்துவிட்டு உங்களின் கருத்துக்கு செவிமடுக்க முடியாது. எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணைக்குழு அமையவே எமது செயற்பாடுகள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.