ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தாம் உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸவும் மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக தான் விடுத்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன செவிசாய்க்கவில்லை எனவும் அதனை வலியுறுத்தியதால் கட்சியின் அரசியல் குழு மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ள அவா் தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியதையே தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் கூறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்ததாகத் தெரிவித்த சந்திரிக்கா இன்று நாட்டைப் பார்க்கும் போது அழுவதனையோ அல்லது சிரிப்பதனையோ நினைத்துப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.