உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜேர்மனியக் கடற்படைத் தளபதி இந்தியாவில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி அவரது பதவிக்கு ஆப்புவைத்துள்ளன. தானாகவே பதவியில் இருந்து விலக விரும்பும் கடிதத்தை அவர் பாதுகாப்பு அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் எனக்கருதுவது அர்த்தமற்றது. அதிபர் புடின் மரியாதையையே விரும்புகிறார் – என்றுதளபதி கூறிய கருத்தே பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கே-அச்சிம் ஷோன்பாக்(Kay-Achim Schönbach) இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள மனோகர் பாரிக்கார் பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் பகுப்பாய்வு நிலையத்தில்(Manohar Parrikar Institute for Defence Studies and Analyses)நேற்று முன்தினம் உரையாற்றினார்.
சீனா, ரஷ்யா தொடர்பாகவும் உக்ரைன் நெருக்கடி பற்றியும் குறிப்பிட்ட அவர், ரஷ்ய அதிபர் புடின்”மரியாதையை விரும்புபவர். அதனை அவருக்கு அளிப்பதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.அவர் விரும்பும் மரியாதையை அவருக்கு வழங்குவது எளிது.ஒருவருக்கு மரியாதையை வழங்குவது செலவான விடயம் அல்ல” என்று தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவை பழமைவாய்ந்த முக்கியமான நாடு என்று அழைத்த அவர்,” உக்ரைனில் அதன் நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைதான். ஆனாலும் கிரிமியா தீபகற்பம் பறிபோய்விட்டது. அது உக்ரைனுக்குத் திரும்பக்கிடைக்காது “என்றும் கூறினார்.
ஜேர்மனியின் தளபதியான அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய அந்த உரை உடனடியாகவே யூரியூப் தளத்தில் வெளியாகியதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. அவரது கருத்துகள் ஜேர்மனி அரசின் நிலைப்பாடுகள் அல்ல என்று பேர்ளினில் பாதுகாப்பு அமைச்சு உடனடியாகத் தனது மறுப்பை வெளியிட்டது.
கிரிமியா தீபகற்ப ஆக்கிரமிப்புத் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடுகளுக்கு மாறாகக் கடற்படைத் தளபதி கூறிய கருத்துகள் ஜேர்மனிய அரசுக்கு ராஜீக மட்டங்களில் நெருக்கடியைத் தோற்றுவித்தது.
உக்ரைனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டுக்கான ஜேர்மனியத் தூதரை உடனே அழைத்துக் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தது. தனது கருத்துகளுக்காக ருவிட்டர் பதிவில் வருத்தம் தெரிவித்த தளபதிகே-அச்சிம் ஷோன்பாக், பதவியைத் துறந்துள்ளார்.
அமெரிக்கா, பிாித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்களை வழங்கிவருகின்றன. ஆனால் ஜேர்மனி அதை மறுத்து வருகிறது. ஜேர்மனியின் இந்த நிலைப்பாடு உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யாவைத் தூண்டும் என்று உக்ரைன் வருத்தம் தெரிவிக்கிறது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.23-01-2022