ஈழத் தமிழர் அரசியல் அதிகார பிரச்சனைக்கு கூட்டாட்சி முறைதான் தீர்வு இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய 13-வது அரசியல் சாசன திருத்தம், ஒற்றையாட்சியை ஏற்கக் கூடியது என தமிழ்த் தலைவர்களில் ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
1987 இல் தமிழர்களுக்கான தீர்வு என்னும் பெயரில், 13ஆம் திருத்தச் சட்டம் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் புகுத்தப்பட்டு, 34 வருடங்களாக நடைமுறையிலிருந்தும், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கி யிருக்கவில்லை. இவ்வாறானதொரு 13 ஆம் திருத்தச்சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த, இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கோரும் கடிதத்தை, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்) உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அதன் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சியும் இணைந்து தயாரித்து, கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.
கோத்தபாய குழு!
சர்வதேச சமூகமானது, இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பைஉருவாக்க வேண்டுமென இலங்கை அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றது. அத்தகைய சர்வதேச நெருக்கடி காரணமாகவே, கடந்த அரசு 2016 ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பினைத்தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்திருந்தது. தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே,புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான குழுவினை கடந்த 2020இறுதியில் நியமித்திருந்தார்.
தமிழரின் சுயநிர்ணய உரிமை!
அந்தக் குழுவின் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான வரைபை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான நகர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான நிலை யில் – தமிழ்த் தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமையை ஏற்று சமஸ்டித்தீர்வை அங்கீகரிக்கும், புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கே, இந்தியாஉள்ளிட்ட சர்வதேச நாடுகளால் இலங்கை மீது அழுத்தம் பிரயோக்கிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் அது நடைபெற்றிருக்கவில்லை.
ஒற்றையாட்சியும் 13-வது சரத்தும்
அதற்கு நேர்மாறாக, 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிராந்திய வல்லரசு நாட்டின் தலைவரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், கோட்டாபாய அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தத்திலுள்ள விடயங்கள் உள்ளடக்கப்படும் போது, அத்தகைய யாப்பினை ஆதரிக்காமல் இருக்க முடியாதென, மக்களை ஏமாற்றுவதற்காகவே மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பு பராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரும்போது, மேற்படி தமிழ்த் தரப்புக் கோரிக்கையே அந்த யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக காட்டி, மேற்படி கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பாராளுமன்றஉறுப்பினர்களும், அதனை ஏற்று ஆதரித்து வாக்களிக்கத் தயாராகியுள்ள சூழ்ச்யையே குறித்த கடிதம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
அதிகாரமற்ற சபைகள்!
இவர்கள் நடைமுறைப்படுத்தக் கோரும் 13ஆம் திருத்தச் சட்டத்தில், அரச காணிஅதிகாரமோ, பொலிஸ் அதிகாரமோ, நிதியைக் கையாளும் அதிகாரமோ மாகாண சபைக்கு கிடையாது. மாகாண நிதிக் கட்டுப்பாட்டைக் கொண்டிராத தும், மாகாண திட்டமிடல் கட்டுப்பாட்டினைக் கொண்டிராததும், மாகாணஅரச சேவையின் மீது கட்டுப்பாட்டினைக் கொண்டிராததும் மற்றும் ஆளுநருக்கு ஊழியம் செய்ய வேண்டிய சட்டபூர்வ கடப்பாட்டினைக் கொண்டதுமான – அமைச்சு அதிகாரமற்ற – மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் கொண்டசபையே 13ஆம் திருத்தத்தின் கீழானமாகாண சபைகளாகும்.
ஆளுநருக்கே அதிகாரம்!
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைக்கு அரசகாணியை கையாளும் அதிகாரம் அறவே இல்லை. மாகாணத்தின் பொலிசும் பொதுஒழுங்கும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்குட்பட்டதே. மாகாண நிரலில் உள்ள அதிகாரங்களை மத்திய பாராளுமன்றில் சட்டம் இயற்றுவதன் மூலம் பறித்துக் கொள்ளலாம். ஆளுநரின் அங்கீகாரம் இருந்தாலொழிய மாகாண நிதியத்திலிருந்த எந்தப் பணமும் திரும்பப் பெறமுடியாது. நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரம் இல்லை. வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரம் இல்லை. 13ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுதப்பட்ட மாகாண சபையின் அமைச்சர்களுக்கு, அமைச்சு அதிகாரங்கள் கூட வழங்கப்படவில்லை. அமைச்சு அதிகாரங்களனைத்தும் ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஆளுநருடன் இணங்கிப் போகாவிடில் ஜனாதிபதி குறித்த மாகாண சபையை பொறுப்பேற்கலாம். சுருங்கக்கூறின் மாகாணசபை அதிகாரத்தின் மூலம், முதலமைச்சருக்கான இருக்கையை வாங்குவதற்கும், தேநீர் குடிப்பதற்கான செலவை ஈடுசெய்வதற்கும் கூட, ஆளுநரின் அனுமதியை பெற வேண்டிய நிலையிலேயே முதலமைச்சருக்கான அதிகாரங்களைக் கொண்டுள்ள மாகாணசபை, ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட இருக்க முடியாது. போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்தும், அழிவிலிருந்து மீண்டெழுவதற்கு முடியாதவாறு தமிழ்த் தேசத்தில் மீன்பிடித்துறை, விவசாயத்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு முடக்கியும் ஆக்கிரமித்தும் வைத்துள்ளது. இவ்வாறான நிலையில், கடந்த 34 வருடங்களாக நடைமுறையிலுள்ள, தோல்வியடைந்த, 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளமையானது, தமிழ் மக்களின் எதிர்காலத்தை பேரினவாதத்திற்கு நிரந்தரமாக அடிமையாக்கும் சூழ்ச்சியாகும். இச்சதிமுயற்சியை முறியடிப்பதற்காக விழிப்படைய வேண்டியது அனைத்து தமிழ்மக்களதும் வரலாற்றுக் கடமையாகும்.
ஜன.30ல் போராட்டம்!
அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றயாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து – ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக,வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையை யும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை வலியுறுத்துவோம். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய நீதியை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைநீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளினுடைய விடுதலையை வேண்டியும், எதிர்வரும் 30-01-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று யாழ். நல்லூர் ஆலயமுன்றலில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை வலியுறுத்தும் பேரணிக்கு தங்களது அமைப்பினது பூரணமான ஆதர வைக் கோரி நிற்பதுடன், தங்களது அமைப்பின்- நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.