ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் கறுப்புக் கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து ஊடக அமைப்புக்களும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.