கொரோனா பெருந் தொற்று நோயின்விளைவாக உலகம் முழுவதும் சுகாதாரப்பாவனைப் பொருள்களின் கழிவுகள் மலைபோன்று (mountain of medical waste) பெருகி வருகின்றன.அதனால் உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும்தீங்கு உருவாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
கையுறைகள், முகக்கவசங்கள் , தடுப்பூசி மருந்து ஏற்றும் சிறிஞ்சுகள், சுய வைரஸ் பரிசோதனைக் கருவிகள் (test kits) என்று கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பலமருத்துவக் கழிவுப் பொருள்கள் – அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்ரிக்பொருள்கள் – மிகப் பெரும் தொன் கணக்கில் குவிந்து வருகின்றன.
மிகவும் பின் தங்கிய நாடுகள் தொற்றுநோயைச் சமாளிக்க உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் கடந்த 2020 மார்ச் முதல் 2021 நவம்பர் வரையான காலப்பகுதியில் மட்டும் கப்பல்கள்மூலம் அனுப்பப்பட்ட சுய சுகாதாரப் பாதுகாப்புப் பொருள்களின்(personal protective equipment) மொத்த எடை 87 ஆயிரம் தொன்கள் ஆகும்.
அவற்றை மதிப்பீடுசெய்துள்ள சுகாதார நிறுவனம், அதில் 140 மில்லியன் வைரஸ் சோதனைக்கருவிகள் (test kits) அடங்கும் என்றுதெரிவித்துள்ளது. பிளாஸ்ரிக்கை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அவற்றினால் மொத்தம் 2ஆயிரத்து 600 தொன் பிளாஸ்ரிக் கழிவுகளும் ஏழு லட்சத்து 31ஆயிரம் லீற்றர்(731,000 liters) இரசாயனக் கழிவுகளும் (chemical waste) உருவாகும் எனத் தெரிவித்துள்ளது.
அதேகாலப்பகுதியில் உலகெங்கும் எட்டு பில்லியன் தடுப்பு மருந்து டோஸ்கள் (8 billion doses) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் சிறிஞ்சுகள்(syringes)ஊசிகள்(needles) என்பன அடங்கலாக மேலும் ஒரு லட்சத்து 44 ஆயிரம் (144,000) தொன் கழிவுகள் சேரும் என்றும் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இது ஐ. நாவால் அனுப்பப்பட்ட மருத்துவஉதவிப் பொருள்களது கழிவுக் கணக்குமட்டுமே என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் சுகாதார நிறுவனம், உண்மையில்உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்ற பொருள்களின் கழிவுகள் இவற்றைவிடப் பற்பல மடங்குகள் அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக இந்தப் பிளாஸ்ரிக் மருத்துவக் கழிவுப் பொருள்களில் 97 வீதமானவை எரியூட்டப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கொரோனாவுடன் தொடர்புபட்ட இந்த மருத்துவக் கழிவுகள் உலகெங்கும் கழிவுஅகற்றல் முகாமைத்துவத்தில் பெரும்நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன.
பின்தங்கிய நாடுகளின் மருத்துவமனைகளும் சுகாதார நிலையங்களும் முறைப்படியான கழிவு அகற்றல் முகாமைத்துவத்தைக் கொண்டிருக்காத காரணத்தால் அந்நாடுகளில் அவற்றால் பெரும் சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் ஐ. நா. எச்சரிக்கை செய்துள்ளது.
மருத்துவக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் தொடர்பான விளக்கங்களை சுகாதார நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. பயன்படுத்திய பின் கண்டபடி வீசப்படுகின்ற மாஸ்க்குகளால் பறவைகள், நீர்வாழ் விலங்குகள் பாதிக்கப்படுவதுபற்றிய செய்திகளும் படங்களும் ஏற்கனவே வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.01-02-2022