அரசியல் தலையீடுகள் காரணமாக கிழக்கு மாகாண கல்வியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
தற்போது வடகிழக்கு மாகாணத்தில் 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரத்தினை வழங்குமாறு பாரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், இன்று தேசிய பாடசாலையென்ற போர்வையில் 13வது திருத்த சட்டத்தில் உள்ள விடயத்தினை திரும்ப மத்திய அரசாங்கம் கைப்பற்றுகின்றது. இதுவொரு பிழையான செயற்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (20.02.22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டின் ஏனைய மாகாணங்களைவிட கிழக்கு மாகாணத்தில் கல்வி செயற்பாடுகள் விசேடமான செயற்பாடுகளாக உள்ளன. இதனால், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி செயற்பாட்டில் பாரிய அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பரீட்சை கடமைக்கு நியமனம்பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லவேண்டிய நிலையுள்ளது. சில வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் கல்வி வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இடமாற்றம் செயற்பாடுகளை இடமாற்றசபை செய்யவேண்டும். ஆனால் இங்கு இந்த இடமாற்றச்சபையின் செயற்பாடுகளை காணமுடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.