இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் தமது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை மற்றும் அவரது தொலைபேசியில் தமது திருமண அழைப்பிதழ் இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக தான் தமது கணவன்மார் கைது செய்யப்பட்டனர் என சிறையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்திலிங்கம் நிர்மலதாஸ் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி நிர்மலதாஸ் தெரிவிக்கையில்,
நான் ஒரு முன்பள்ளி ஆசிரியர். எனது கணவர் கைதடி ஆரம்ப சுகாதார பிரிவு வைத்திய சாலையில் சுகாதார பணியாளராக கடமையாற்றி வந்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 06ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.
அவருடன் நானும் சென்று இருந்தேன். விசாரணைக்கு என கணவனை உள்ளே அழைத்து சென்று இருந்தனர். சுமார் 3 மணி நேரம் நான் வெளியே காத்திருந்தேன். விசாரணைகள் முடியவடையவில்லை. பின்னர் என்னை வீடு செல்லுமாறு கூறி விட்டனர்.
அதன் பின்னர் மேலதிக விசாரணை என கணவனை வவுனியா – கொழும்பு என அழைத்து சென்று இருந்தனர்.
இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் எமது திருமண அழைப்பிதழ் இருந்தமையை எனது கணவரின் கைதுக்கு காரணம்.
கணவர் கைது செய்யப்படும் போது , எமக்கு திருமணம் முடிந்து 157 நாட்களே ஆகி இருந்தன.
கணவனை கைது செய்து 10 நாட்கள் கழித்து கணவன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என என்னிடம் கூறி இருந்தார்கள். ஆனாலும் கணவனை விடுவிக்கவில்லை.
கணவன் கைது செய்யப்பட்டு 18 மாதங்களுக்கு பின்னர் 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியல் காலம் 14 நாட்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வருகிறது.
எந்த வித குற்றமும் இழைக்காத எனது கணவனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என கோரியே சிறையில் கணவனும் ,ஆளுநர் அலுவலகம் முன்பாக நாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தார்.
அதேவேளை சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் இரட்ணசிங்கம் கமலாகரனின் மனைவி ஈஸ்வரி கமலாகரன் தெரிவிக்கையில்,
நாங்கள் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தனாங்க எனது கணவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றி வந்தார். அவர் தெடர்பான அனைத்து தரவுகளும் இராணுவம் , புலனாய்வு பிரிவு என அனைத்து தரப்பினரிடமும் உண்டு. அவ்வாறு இருக்கும் போது நாட்டுக்கு எதிராக , இராணுவத்திற்கு எதிராக எனது கணவர் எப்படி செயற்படுவார் ?
கடந்த 2020ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 06ஆம் திகதி கிளிநொச்சி காக்கா கடை சந்தி பகுதிக்கு விசாரணைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக கணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் பிரகாரம் விசாரணைக்கு சென்ற கணவனுடன் நானும் சென்று இருந்தேன்.
அங்கே விசாரித்து விட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினார்கள். நாங்கள் வீடு திரும்பினோம். அவ்வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த கறுப்பு நிற வாகனத்தில் இறங்கியவர்கள் எனது கணவரை பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது அடையாள அட்டையை என்னிடம் தந்தார்கள்.
நான் கணவனை அவர்களிடம் இருந்து மீட்க முயற்சி செய்தும் பயனின்றி போனது. உடனேயே கிளிநொச்சி காவல் நிலையம் , பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் சென்று கேட்ட போது , தாம் யாரையும் கைது செய்யவில்லை என கூறினார்கள். பின்னர் என்னை கணவனை காணவில்லை என தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சொன்னார்கள்.
அங்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது . எமது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது வீட்டிற்கு முன்னால் வாகனங்கள் வந்து நிற்பதாகவும் , வாகனத்தில் வந்தவர்கள் வீட்டை சோதனையிடுவதாகவும் கூறினார்கள்.
அதனை அடுத்து நான் வீட்டிற்கு சென்ற போது , வீட்டின் முன்னால் எனது கணவனை அழைத்து சென்ற வாகனமும் நின்றது. பின்னர் அவர்கள் வீட்டில் இருந்து சென்ற போது நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். அதன் போது அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்குள் சென்ற போது நான் எனது கணவரை இந்த வாகனத்தில் வந்தவர்கள் தான் அழைத்து சென்றார்கள் என அடையாளம் காட்டி கேட்ட போது அதனை அவர்கள் மறுத்தனர் இது தங்களின் மேலதிகாரியின் வாகனம். இதில் யாரையும் அழைத்து வரவில்லை என.
நான் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருந்தேன். சில மணி நேரத்தின் பின்னர் என்னை அழைத்து அந்த வாகனத்தினை திறந்து காட்டினார்கள். எனது கணவர் தாக்கப்பட்ட நிலையில் அவருடைய ஆடைகள் கிழிந்த நிலையில் கணவன் கைவிலங்குடன் வாகனத்தினுள் இருந்தார்.
பின்னர் கணவனை கைது செய்வதாக கூறி வவுனியா – கொழும்பு என கொண்டு சென்று 18 மாதங்களின் பின்னர் 2021ஆம் ஆண்டு 12ஆம் ஆண்டு 20ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது 14 நாட்களுக்கு ஒரு தடவை விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டு வருகிறது.
எமக்கு மூன்று பிள்ளைகள் மூவருமே 10 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் கல்வி பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கணவரின் கைதினால் நாம் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகிறோம்.
இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் எனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்ததாலையே கணவர் கைது செய்யப்பட்டார் என கூறினார்கள்.
அதுவும் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததாக கூறப்படுகிறது.
அதாவது குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு 5 வருட கால பகுதிக்கு முன்னர் எனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை குற்றம் என கைது செய்துள்ளனர்
எமது குடும்ப சூழல் , பிள்ளைகளின் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டு எனது கணவரை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
அதேவேளை நேற்றைய தினம் வெளியான ஊடக செய்திகளில் “கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில்” கைது செய்யப்பட்டவர்கள் என செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை தாம் மறுப்பதாவும், தமது கணவன்மார் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல எனவும் தெரிவித்து இருந்தனர்.
பின்னணி.
கடந்த 2020ஆம் ஆண்டு யூலை மாதம் 03ஆம் திகதி இயக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறையினா் தெரிவித்து இருந்தனர்.
அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் மனைவி நல்லதம்பி நகுலேஸ்வரியை கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து , வைத்தியலிங்கம் நிர்மலதாஸ் மற்றும் இரத்தினசிங்கம் கமலாகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.