யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
குறித்த அரசியல் கைதிகளை இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆளுநர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இன்று சனிக்கிழமை காலை ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் ஒருவருடன் அரசியல் கைதிகளின் உறவினர்களும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்து இருந்ததுடன் , தமது உண்ணாவிரத போராட்டத்தினையும் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.
அதற்கமைவாக இன்று சனிக்கிழமை காலை சிறைச்சாலைக்கு சென்ற அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து அரசியல் கைதிகளும் தமது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.