உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்துள்ளது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது.
தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ தளங்களை ரஷ்ய ராணுவம் தகர்த்துள்ளது. அந்த நாட்டின் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன.
கீவ் விமான நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் முழுவதும் நேற்று 3 ஆவது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று (26.02.22) கூறியதாவது:
“உக்ரைன் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதை ரஷ்யாவும் ஏற்றுக் கொண்டது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்காரணமாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை.
ஆனால் உக்ரைன் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை. எனவே சனிக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் போரை தொடங்கியுள்ளோம். நாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. உக்ரைனில் ஆட்சி நடத்தும் நவீன கால நாஜிக்கள், இராணுவத்துக்கு எதிராகவே போரிடுகிறோம். ஆனால் உக்ரைன் அரசும், இராணுவமும் தீவிரவாதிகளை போல செயல்படுகிறது. போரில் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் அரசு தரப்பு கூறும்போது, “தலைநகர் கீவில் ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 198 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வருகிறோம். இதுவரை 3,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. 2 பீரங்கிகளை அழித்துள்ளோம்” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி நேற்று (26.02.22) வெளியிட்ட வீடியோவில், “நாடு முழுவதும் போர் நடைபெற்று வருகிறது. எங்கள் நாட்டை காப்பாற்ற தீவிரமாக போரிட்டு வருகிறோம். தலைநகர் கீவ் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷ்ய இராணுவத்தை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். பொதுமக்கள் சாலை, தெருக்களில் இறங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
என்னை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சில நாடுகள் முன்வந்துள்ளன. அதை நான் விரும்பவில்லை. கடைசிவரை உக்ரைனிலேயே இருப்பேன். எங்களுக்கு ஆயுதங்களை அளித்து உதவுங்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக சேர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் உளவு துறை வட்டாரங்கள் கூறும்போது, “உக்ரைன் மீதான போரால் ரஷ்யாவுக்கு நாளொன்றுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு போர் நீடித்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ரஷ்யாவால் சமாளிக்க முடியாது. எனவே முடிந்தவரை ரஷ்யாவுக்கு எதிராக தீரமாகப் போரிடுவோம். தலைநகர் கீவில் 1.5 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் போரில் குதித்துள்ளனர்” என்று தெரிவித்தன.