உக்ரைனுக்கு எதிரான படைப் பலப் பியோகத்தை உடனடியாக நிறுத்திப் படைகளை அங்கிருந்து முற்றாக அகற்றுமாறு ரஷ்யாவைக் கோருகின்ற பிரேரணை ஐ. நா. பொதுச் சபையில் மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது.
சபையின் 193 உறுப்பு நாடுகளில் 141நாடுகள் பிரேரணையை ஆதரித்தும் ஐந்து நாடுகள் எதிர்த்தும் வாக்களித்திருக்கின்றன.சீ னா, இந்தியா உட்படகுறைந்தது 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, சிரியா எரித்திரியா ஆகியன எதிர்த்து வாக்களித்தன.
மொஸ்கோ “உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அத் தீர்மானம் கோருகிறது. தனது அணு ஆயுதப் படைகளது ஆயத்த நிலையை அதிகரித்தமைக்காக ரஷ்யா மீது தீர்மானம் கடும்கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
ஐ. நா. பொதுச் சபையின் அவசரகாலக்கூட்டம் கடந்த இரண்டு தினங்களாகநடைபெற்று வந்தது. இன்று புதன்கிழமை வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்பட்டபோது சபையில் பலத்த கரகோஷத்துடன் அது வரவேற்கப்பட்டது.
பொதுச்சபை இவ்வாறு அவசரமான கூட்டம் ஒன்றைநடத்துவது 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே முதல் முறையாகும்.பொதுச் சபையின் இன்றைய தீர்மானம் போர் மேலும் தீவிரமாகுவதற்கே வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யத் தூதர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைனில் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவந்து தனது படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றுகோரும் பிரேரணை முதலில் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்டபோது மொஸ்கோ தனது வீற்றோ அதிகாரத்தினால் அதனை நிறைவேற்றவிடாது தடுத்துவிட்டது
.அந்த வாக்கெடுப்பிலும் சீனாவும் இந்தியாவும் கலந்துகொள்ளாதுவிலகியிருந்தன என்பது தெரிந்ததே. பாதுகாப்புச் சபையில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை அடுத்தே பொதுச் சபையின் அவசரகாலக் கூட்டத்தைக் கூட்டிஅதிலே உறுப்பு நாடுகளது ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது
.——————————————————————
-குமாரதாஸன். பாரிஸ்.02-03-2022