அமெரிக்காவில் வடகரோலினா மாநிலத்தில் வசித்து வரும் கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான ”தமிழ் மரபு விருது” வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை கரோலினா தமிழ்க் கலைக்கூடமும், களரி அடிமுறை நிலையமும் இணைந்து வழங்கிக் கௌரவித்துள்ளனர். வருடாந்தம் அமெரிக்காவில் தமிழுக்காக வியத்தகு சேவை செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த விருது இவ்வருடம் ஈழத்து தமிழர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் அரிதான விடயமாகும். இந்த விருது பங்குனி 5 ஆம் திகதி வழங்கப்பட்டது.
இந்த விருதானது இவர் வடகரோலினா மாநில ஆளுனருடன் தொடர்ச்சியாக தமிழ்மொழி பற்றி எடுத்துரைத்து தை மாதத்தை ”தமிழரின் கலாசார மற்றும் மொழி மாதமாக” பிரகடனப்படுத்த பின்னின்று உழைத்ததற்காக வழங்கப்பட்டது. இவரின் வேண்டுகோளை ஏற்று முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு மாநில ஆளுனர் இந்தப் பிரகடனத்தை வழங்கினார். அத்துடன் இவரின் வேண்டுகோளின் படி ஆளுனர் அதனை தானே வாசித்த காணொளியையும் வழங்கியிருந்தார். இவ்வாறு அமெரிக்காவில் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் நடந்தது. அத்துடன் கலாநிதி. சிவயோகன் தொடர்ச்சியாக ஒவ்வாரு வருடமும் இதனை பெற்றதுடன், இவ்வருடம் தமிழ்நாட்டின் கீழடி மற்றும் பெருணை ஆகிய இடங்களிகல் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுகளை விஞ்ஞான முறைப்படி எடுத்துரைத்து அதனையும் ஆளுனரின் பிரகடனத்தில் இணைத்தார். இந்த முயற்சிக்காகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் தமிழ் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ் இலக்கண கையேடுகள் தயாரித்து வழங்கியதற்காகவும் வழங்கப்பட்டது. அத்துடன் இவரின் முயற்சியால் தமிழ்மொழிக்கென சர்வதேச நிறுவனமொன்று தமிழ்மொழி பரீட்சையொன்றையும் நடத்த முன்வந்து 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தி சர்வதேச சான்றிதழ்களும் வழங்கிவருகின்றனர்.
கலாநிதி. சிவயோகன் அவர்கள் முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌதிகதுறையில் 1997 முதல் 2012 வரை கடமையாற்றியதோடு துறைத் தலைவராகவும் இருந்தார். அத்துடன் அவருக்கு இங்கிருந்த காலத்தில் தமிழ் மாணவர்களுக்கு செய்த சேவைகளுக்காக 2006 ஆம் ஆண்டுக்கான ”இளம் விஞ்ஞானி” விருதினை விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு வழங்கி கௌரவித்தது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சிறந்த கண்டுபிடிப்பிற்காக விருதுகளும் பெற்றவராவார்.