உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடம் வகிப்பவரும், ஒலிம்பிக் சம்பியனுமான 24 வயதான ஜெர்மனிய டென்னிஸ் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், 19 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் நடந்த அகபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடிய போது அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சர்ச்சையில் சிக்கினார். இரட்டையர் பிரிவில் பிரேசிலின் மார்செலோ மெலோவுடன் இணைந்து விளையாடிய அவர் முதலாவது சுற்றில் லாயிட் கிளாஸ்பூல் (இங்கிலாந்து)- ஹெலியாவாரா (பின்லாந்து) இணையிடம் போராடி தோல்வியடைந்தாா்.
இந்த போட்டியின் போது சில புள்ளிகளை நடுவர் எதிர் ஜோடிக்கு வழங்கிய போது ஆட்சேபித்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இறுதியில் நடுவரை அச்சுறுத்தும் விதமாக அவர் அமர்ந்திருந்த ஆசனம் மீது 4 முறை டென்னிஸ் துடுப்பால் ஆவேசமாக ஓங்கி அடித்தார். அதனைத்தொடர்ந்து அவர் அந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் இருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்திய ஆண்கள் டென்னிஸ் சம்மேளனம் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், 19 லட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. அத்துடன் ஓராண்டு காலம் அவரது நடத்தை தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் . இந்த காலக்கட்டத்தில் அவர் ஏதாவது தவறு செய்தால் கடும் தண்டனைக்குள்ளாக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது