பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் பொதுமக்களுக்கான சேவையினை திறம்பட செயல்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
” யாழ் மாவட்ட கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி – 2021″ மாவட்ட மட்ட விருது வழங்கும் நிகழ்வு, மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் பொதுமக்களுக்காக சரியான முறையில் செயற்பட வேண்டும். எனவே தமது இலக்கினை தவறாது கடமையாற்ற வேண்டும். அத்தோடு எங்களைப் பற்றிய ஒரு சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு வழங்குகின்ற சேவைகளை உரிய வகையில் வழங்கி மக்களை திருப்திப்படுத்தி செயற்படவேண்டும்.
மக்களை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல எனவே பொதுமக்களுடன் இணைந்து இசைந்து செயற்பட வேண்டும். அத்தோடு பொதுமக்களை நீங்கள் திருப்திப்படுத்த முடியாது திருப்தி படுத்தாத பட்சத்தில் மக்கள் உங்கள் மீது பிழையான அபிபிராயங்களைகளை கொண்டு விடுவார்கள்.
உங்களுடைய அலுவலகங்களை சரியான முறையில் பேண வேண்டும். பொதுமக்கள் இடையேயான உறவு முறையை சரியாக பேணுவதோடு, சக உத்தியோகத்தர்களுடனும் சரியாக பேணி உங்களுடைய திறமைகளை நாளாந்தம் வளப்படுத்தி கொள்ள வேண்டும்.
அத்தோடு தங்களுடைய தொழில் வாண்மையினை நிரூபிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் நீங்கள் தலைமைத்துவ பொறுப்பினை ஏற்று சமூக பொருளாதார இதர செயற்பாடுகளுக்கு பொதுமக்களுக்கு நீங்கள் ஆலோசகராகவும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.
அத்தோடு அவர்களுக்கு தேவையான விடயங்களை உரிய முறையில் உரிய அணுகு முறையோடு செயற்படுத்த வேண்டும். சவாலான ஒரு தொழில் தான் இந்த கிராம அலுவலர் தொழில் ஆகும்.
பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகம் சரியாக இயங்க வேண்டுமானால் கிராம மட்டங்களில் கிராம அலுவலர்கள் வினைத்திறனாக செயற்பட்டால் மாத்திரமே மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்கள் திறம்பட செயற்பட முடியும். அத்துடன் பொது மக்களுக்கான சேவையை வழங்க முடியும் எனவே கிராம சேவையாளர்கள் நீங்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.