கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (11) ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சத்தீவு இந்தியாவின் இராமநாதபுரத்தில் இருந்து 12 .4 கடல் மைல் தொலைவிலும் நெடுந்தீவில் இருந்து 10.5 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
கச்சத்தீவினை இலங்கையிடம் கையளிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் வருடாந்தம் இரு நாட்டு மீனவர்களுடன் சகோதரத்துவ உணர்வுடன் இணைந்து பங்கேற்று வருகின்றனர்.
இரு தரப்பு மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைந்துள்ள போதிலும் கொரோனாத் தொற்று நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதினாலும் இம்முறை திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவான பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக விசைப்படகு மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மீனவர்களின் பெயர் விபரங்கள் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது