குடும்பத் தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மதுபோதையில் , கையில் பெற்றோல் போத்தல் ஒன்றுடன் வந்து , தனக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு என்றும் அதனால் தான் மனமுடைந்துள்ளதாக கூறி , தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தீயிட்டு கொளுத்தி , தானும் உயிர் மாய்க்க போறேன் என்றுள்ளார்.
அவரை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் , அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது , அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அட்டகாசம் புரிந்துள்ளார்.
அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.