அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் இன்று தெரிவித்துள்ளனர். அதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு மேலும் சிலர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இந்தியாவுடனான உடன்படிக்கையில், அமைச்சரவைக்கு அதனை சமர்ப்பிக்கும் முன்னரே கையொப்பம் இடப்பட்ட விடயத்திற்கு அதிருப்தி வௌியிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் தற்போது அமெரிக்க வௌிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, குறித்த குழுவினர் மல்வத்து பீட அனுநாயக்கரையும் அஸ்கிரிய பீட மகாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.