வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கேள்வி எழுப்பியுள்ளார்.
வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் விசனம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட, ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற போது பல்வேறு முக்கிய விடயங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (25.03.22) இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் பிரதான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தீர்வு குறித்து அதிகாரப் பரவல் குறித்து தொடர்ந்து பேச இணக்கம்.
அதற்கு முன்பாக 4 விடயங்கள் குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
1) நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுவிப்பு
2) வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு நிறுத்தப்படும். இராணுவ தேவைகளுக்காக இனிநிலம் எடுக்கப்படமாட்டாது. எல்லைகள் மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். இனப்பரம்பலை மாற்றுவதற்கான செயற்பாடுகள் அனைத்தும் பேச்சுவார்த்தைக் காலத்தில் நிறுத்தப்படும்.
3) காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக கொடுப்பனவே 1லட்சம் அது முழுமையானது அல்ல. காணமல் போனவர்கள் காணாமல் போனதற்கான பின்னணி குறித்த விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும்.
4) போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்ய விசேட அபிவிருத்தி நிதி உருவாக்கப்படும். இந்த நிதி மூலமாக புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். என உறுதியளிக்கப்பட்டுள்ளது.