பாரிஸில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் ருவீற்றர் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச் சித்திரம் ஒன்று பிரான்ஸைக் கடுப்புக்குள்ளாக்கியிருக்கிறது. வெளிவிவகார அமைச்சு உடனடியாகவே ரஷ்யத் தூதரை அழைத்துத் தனது கடும் கண்டனத்தை அவரிடம் தெரிவித்துள்ளது.
பிரெசெல்ஸ் நகரில் அதிபர் மக்ரோனிடம் ரஷ்யத் தூதரகத்தின் கேலிச் சித்திரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.அதற்கு அவர் தூதரக ராஜதந்திரிகளின் “தவறு” “ஏற்றுக்கொள்ள முடியாத கேலிச் சித்திரங்கள்” என்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
“நாங்கள் ரஷ்யாவுடன் மரியாதைக்குரியமுறையில் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம். போரில் சகல தரப்புகளையும் மதித்து சமரச முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.எனவே இது ஒரு தவறு என நான் நினைக்கிறேன். அது திருத்தப்படும் என நம்புகிறேன்” என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இரண்டு கேலிச் சித்திரங்களில் ஒன்று நோயுற்ற ஐரோப்பாவுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல தடுப்பூசிகளைக் குத்திச் சிகிகிச்சை அளிப்பதனை உருவகப்படுத்துகிறது.
“நியோநாசிஸம்” (neo-Nazism) ரஷ்ய எதிர்ப்புணர்வு (“Russophobia”) மற்றும் கோவிட்-19 (“Covid-19”), நேட்டோ (NATO) போன்ற பெயர்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
——————————————————————– –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 26-03-2022