கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் இன்று ஆரம்பமாகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் போட்டியிடுகின்றன.
இதுவரை 14 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறை கிண்ணத்தினை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு தடவை கிண்ணத்தினை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா ஒரு தடவையும் கிண்ணத்தினை வென்றுள்ளன.
இந்தமுறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்பதனால் 2011 ஆண்டு போட்டியை போல இந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடுகின்றன.
குரூப் – ஏயில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி கப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் குரூப் – பியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டு முறை விளையாட வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் இரண்டு தடவையும் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறும்.
மே 22ஆம் திகதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகிறது. பிளே ஒப் சுற்று போட்டி விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனும் நிலையி்ல் இறுதிப்போட்டி மே 29ஆம் திகதி நடைபெறும்.