ராஜபக்ஸக்களுக்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்தவொரு அரசியற் கட்சிகளுடனும் செயற்படத் தயார் என 43ஆவது படையணின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என ராஜபக்ஷக்களை எதிர்க்கும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்குப் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது காலத்தின் தேவை. அதனால் பாரிய புதியக் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு நாம் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தங்களின் அழைப்பை ஏற்று 43ஆவது படையணி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனாலேயே கடந்த வெள்ளிக்கிழமை ஐ.தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள தீர்மானித்ததாகவும், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்காலத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.