மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள பிரான்ஸின் அழகிய தீவு கோர்சிகா (Corsica). மலைப்பாங்கும் மலையேறும் போட்டிகளும் அழகிய கடற்கரைகளும் என்று பிரபலம் கொண்ட அந்தத் தீவும் பாரிஸின் ஆதிக்கத்திலிருந்து விடுபட விரும்பும் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாக நெடுங்காலம் விளங்கி வருகிறது.
ஒரு மனிதனது மரணத்தின் எதிரொலியாக இந்த மாதத் தொடக்கத்தில் கோர்சிகா தீவு வன்முறைகளால் பற்றி எரியநேர்ந்தது.அதற்கு என்ன காரணம்? 1970களில் தீவின் விடுதலைக்காகப் போராடிய கோர்சிகா தேசிய விடுதலை முன்னணியின் (National Liberation Front of Corsica-FLNC) ஆயுதப் போராட்டம் 2014 இல் முடிவுக்கு வந்தது.அந்த இயக்கத்துடன் சேர்ந்து செயற்பட்டவர் என நம்பப்படுகின்ற ஈவான் கொலோனா (Yvan Colonna) என்ற போராளி ஒரு முக்கியகொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுப் பல ஆயுள் தண்டனைகள் பெற்ற கைதியாகப் பிரான்ஸின் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார். நாட்டின் மிகப் பிரபல சிறைக் கைதிகளில் ஒருவரான 61 வயதுடைய கொலோனா 19 வருட சிறைவாசத்தின் கீழ், கடந்த 2ஆம் திகதி சக இஸ்லாமியத் தீவிரவாதக் கைதி ஒருவரின் மோசமான தாக்குதலுக்கு இலக்காகிக் கோமா நிலைக்குச் சென்றார். மூன்று வாரங்களின் பின்னர்உயிரிழந்தார்.
பலரால் தேசிய நாயகனாகக்கருதப்பட்ட கொலோனாவின் கொலைக்கு கோர்சிகா தேசிய வாதிகள் பிரான்ஸின் மீது குற்றம்சுமத்துகின்றனர்.ஆனால் பாரிஸ் அரசோசக கைதி ஒருவரால் நடத்தப்பட்ட”பயங்கரவாதத் தாக்குதல்” அது என்று கூறுகின்றது.
கொலோனா புரிந்த குற்றம் என்ன? கோர்சிகா தீவுக்கான பிரான்ஸின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்த கிளோட் எரிக்னாக் (Claude Erignac) என்ற பொலீஸ் அதிகாரி 1998 இல் தனது மனைவியுடன் இசை விழா ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த வழியில் மிக மர்மமான முறையில் இரு நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளால் பொலீஸ் நிலையம் ஒன்றின் மீதான தாக்குதலில் அபகரி க்கப்பட்டவை என்பது தெரிய வந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சுமார்ஐந்து வருட காலம் நடத்தப்பட்ட தேடுதல்களுக்குப் பின்பு, 4 June 2003ல் ஈவான் கொலோனா கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கோர்சிகா தேசிய விடுதலை முன்னணிநடத்திய பல நூற்றுக் கணக்கான தாக்குதல்களில் மிக முக்கியமானது கிளோட் எரிக்னாக்கின் கொலை.உலக மகா யுத்தகாலத்துக்குப் பிறகு கொல்லப்பட்ட முக் கிய பிரெஞ்சு அரசுப் பிரதிநிதி ஒருவரது அரசியல் படுகொலையாகவும் அதுவே கருதப்பட்டது. கோர்சிகாவின் மலைப்ப குதியில் ஆட்டுத் தொழுவம் ஒன்றில் மறைந்திருந்தவேளை பிடிபட்ட கொலோனாவுக்குப் பயங்கரவாதக் குற்றங்கள் மற்றும் கொலைக்காக 2011 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஆயினும் அவர் தன் மீதான கொலைக் குற்றச்சாட் டைத் தொடர்ந்து மறுத்தே வந்தார்.
பிரான்ஸின் தென்பகுதிச்சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த அவரைக் கோர்சிகாவுக்கு இடம்மாற்றுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே சிறையில் பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற சக கைதி ஒருவரால் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். கடவுள் மறுப்புக் கருத்துக் கொண்டிருந்த காரணத்தாலேயே அவரைத் தாக்கினார் என்று அந்த இஸ்லாமியக் கைதி கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கொலோனா மீதான தாக்குதல் கோர் சிகாவை நெருப்பில் எரிய வைத்தது. சில நாட்களாக வீதிகள் எங்கும் பொலீஸாருடன் நடந்த மோதல் வன்முறைகளில் பெருமளவு பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பிரான்ஸைப் பொறுத்த வரை கொலோனா ஒரு கொலைக் கைதி ஆனால் கோர்சிகாவில் அவர் இன்னமும் ஒரு “ஹீரோவாக” மதிக்கப்படுகின்ற தேசியவாதி. கொலானாவின் உடல் விமானம் மூலம் தீவுக்கு எடுத்துச் செல் லப்பட்டு அங்கு அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வெள்ளை – கறுப்பு நிறங்களிலான கோர்சிகாவின் கொடிகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்குத் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினர். அங்கு பெரும் உணர்ச்சியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்திய அவரது மரணம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்ரோனின் அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியது.
ஒரு பயங்கரவாதக் கைதியின் மறைவுக்காக கோர்சிகா கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதை பாரிஸ் நிர்வாகம்தடுக்க முடியாமல் பார்த்திருக்க வேண்டிஏற்பட்டது.
கோர்சிகாவுக்கு மேலும் தன்னாட்சி அதிகாரங்களை(‘autonomy’)வழங்கும் பேச்சுக்களுக்குத் தயார் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா அங்குள்ள செய்திஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.அங்கு வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்தே பாரிஸின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பிரான்ஸின் எல்லையில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர்கள்தொலைவில் – மத்தியதரைக் கடலில் – உள்ள கோர்சிகா தீவு மக்கள் தனிநாட்டுக்கு ஒப்பான மேலும் அதிகாரங்களைப் பெறுவதற்கு ஈவான் கொலோனாவின் மரணம் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
. -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
27-03-2022