தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை வேலைத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்று வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பசுமையான ஒரு தேசம் தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை புரட்சி என்னும் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நாடு பூராகவும் வீட்டுத்தோட்ட பயிற்சிசெய்கை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நிகழ்வு யாழ் மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 84042 வீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் குறித்த வேலைத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதோடு ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 ரூபா பெறுமதியான ஆறு விதை பொதியுடன் பத்து மிளகாய், கத்தரி கறிமிளகாய் கன்றுகள் இரண்டு பழ மரக்கன்றுகள் இரண்டு தென்னங்கன்றுகள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த வீட்டுதோட்டத்தை மேம்படுத்துவதற்காக மேலதிகமாக அரசாங்கத்தினால் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர், யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.