அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 16 பேர் நாளை (05.04.22) பாராளுமன்றத்தில் சுயேட்சைக் குழுவாக தனித்தனியாக அமர்வார்கள் என கூறப்படுகின்றது. இவர்களுடன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனியே அமரவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்னும் ஆளும் கட்சியிலேயே உள்ளனர். இந்த நிலையில், விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து சுயேச்சையாக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை (05.04.22) நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமல், வாசு, கம்மன்பில, திரான் அலஸ் ஆகியோரை அரசில் இணையுமாறு கோட்டாபய அழைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்தபோது இந்த அழைப்பினை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய முடியாதுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பின்போது மற்றவர்களுடன் தானும் இதனையே கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.