அரசின் அட்டூழியங்களை வன்மையாகக் கண்டிப்போம் – சுதந்திர ஊடக இயக்கம்
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டில் அனைத்து சமூக ஊடகப் பயன்பாட்டையும் முடக்குமாறு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இன்று (ஏப்ரல் 03) அறிவித்துள்ளது. முன்னதாக, ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதுடன், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் இருண்ட காலகட்டத்திற்கு தீர்வைக் காணத் தவறிய அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை நசுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் அனைத்தையும் சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
இலங்கையின் அரசியலமைப்பு, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்டவைகளை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளதுடன் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்ளும் சுதந்திரம், கருத்துச்சுதந்திரத்தின் ஒரு பகுதியென உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள பல தீர்ப்புகள்மூலம் விரிவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உரிமையில் தற்போதைய அரசாங்கத்தையும் அரச தலைவரை விமர்சிப்பதும் உள்ளடங்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள மேல் குறிப்பிட்ட நடவடிக்கைகள் அந்த உரிமைகள் அனைத்தையும் மனம்போன போக்கில் மீறும் செயற்பாடாகும்.
சமூக ஊடகங்கள் இப்போது மக்களின் வாழ்க்கையின் ஒரு பிரதான அங்கமாகவும், அத்துடன் மேற்கண்ட உரிமைகளை அனுபவிப்பதற்கான இன்றியமையாத கருவியாகவும் மாறியுள்ளது.சமூக ஊடகம் சமீபத்திலிருந்து தொழில்முறை ஊடகவியலுக்காகப் பரந்த தளமாகப் பயன்படுத்தப்படுவதுடன், முகப்புத்தக பக்கங்கள் மற்றும் யூடியூப் அலைவரிசைகள் ஊடாகத் தொழில்முறை ஊடகவியலில் ஈடுபடும் ஊடக சமூகம் ஒன்று உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையானது மக்களின் தகவல் அறியும் உரிமையையும் ஊடக சமூகத்தின் தொழிற்சங்க உரிமைகளையும் மீறுவதாகும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகச் சமூக ஊடகங்களும் குறிப்பிடத் தக்க வகிபங்கைக் கொண்டுள்ளன. ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு, சமூக ஊடக ஆர்வலர் அனுருத்த பண்டார, தங்களை காவல்துறை என்று அறிமுகப்படுத்திய ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதுடன், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட சமூகம், சமூக ஊடக விழிப்புணர்வு மூலம் உடனடியாகத் தலையிடாவிட்டால் அவர் பெரும் ஆபத்திற்கு முகம்கொடுத்திருப்பார். மேலும், மார்ச் 31 ஆம் திகதிஅன்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாகச் சில வன்முறைச் செயல்களின் விளக்கத்தைக் கட்டமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி காணொளி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்குச் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதற்கு சமூக ஊடக நடவடிக்கையும் பங்களித்தது. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டும் சமூக ஊடகங்களை முடக்கும் வெட்கமற்ற நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டது என்பது எங்கள் அவதானிப்பாகும்.
ஜனநாயக ரீதியாக மக்கள்வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மேற்கொள்ளும் இச்செயற்பாடானது ஜனாநாயகத்திற்கு முரணாகும். மேலும் தனது குடிமக்களை ஒடுக்கும் வன்முறை வழிகளில் நம்பிக்கை கொண்ட அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான பதிலை எதிர்பார்ப்பது கேலிக்குரியதாகும். ஆகவே, இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து குடிமக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அடிப்படை உரிமைகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மனிதநேயத்தின் பெயரால் அணிதிரள்வதற்கும் தனித்தனியாகவும் கூட்டாகவும் கைகோர்க்குமாறு அனைத்து ஜனநாயகவாதிகளையும் சுதந்திர ஊடக இயக்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
சுதந்திர ஊடக இயக்கம், ‘சுதந்திர பொறுப்பின் நீட்சி’ என்ற தொனிப்பொருளின் அடிப்படையில், தற்போதைய இருண்ட காலகட்டத்தில் சகல நடவடிக்கைகளின்போதும் இந்தத் தொனிப்பொருளை மனதில் கொள்ளுமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறது. மேலும் மக்களின் அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் சுதந்திர ஊடக இயக்கம், மேல் குறிப்பிட்ட இலக்குகளுடன் இதயப்பூர்வமாக அர்ப்பணிப்புடன் துணைநிற்கின்றது என்பதனை சுதந்திர ஊடக இயக்கம் இங்குக் தெரிவித்துக்கொள்கின்றது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு.