இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று வெள்ளிக்கிழமை (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்த நிலையில் அவா்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (8) வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறை யை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (7) இரவு மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10),மற்றும் இரண்டரை (2- 1/2)வயது சிறுவன் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரே இவ்வாறு படகு ஒன்றில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் வந்து இறங்கி உள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினா் அவா்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவா்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் நான்கு இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மெரைன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.