புதிய தொழில் முயற்சிகளுக்கும் ஆக்கச் செயற்பாடுகளுக்கும் பல்கலைக்கழகம் உறுதுணையாக நிற்கும் என லிற்றில் சை-கிட் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா தெரிவித்தார்.
அதேவேளை, லிற்றில் எய்ட்டின் முயற்சிகளைப் பாராட்டியதுடன் இவ்வாறான ஆதரவும் உந்து சக்தியும் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், பில் கேற்ஸ், ஸ்ரீவ் ஜொப்ஸ் கூட சிறிய அளவில் ஆரம்பித்தே பெரிதாக வளர்ந்தனர் எனத் தெரிவித்த பேராசிரியர் சற்குணராஜா கலைநீதனும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளனாக வருவார் என நம்பிக்கை வெளியிட்டார்.
விஞ்ஞான கணிதத் துறையில் மணவர்களை ஈர்க்கும் லிற்றில் சை-கிட் வெளியீடு இன்று சனிக்கிழமை 9 ஆம் திகதி கிளிநொச்சி லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெற்றது.
ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளரும் சமூக சேவகியுமான சுவர்ணா நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அற்புதராஜாவுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி; கதிர்காமநாதன் மற்றும் அவரது துணைவியார் கலாநிதி கல்யானி கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் சற்குணராஜா நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத காரணத்தால் காணொளிப் பதிவாக தன் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
லிற்றில் சைக்-கிட் டை அதனை உருவாக்கிய கலைநீதனின் பெற்றோர் கையளிக்க கலாநிதி கதிர்காமநாதன், கலாநிதி கல்யாணி கதிர்காமநாதன் ஆகியோர் வெளியிட்டு வைக்க பேராசிரியர் அற்புதராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்வில் லிற்றில் சை-கிட் டை உருவாக்கிய சைபோட் அக்கடமி ‘அப் – செயலி’ ஒன்றையும் வெளியிட்டு வைத்தது. இச்செயலியை சிம்லோன் பிரைவேட் லிமிடெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைரமுத்து மிரளன் வெளியிட்டு வைத்தார்.
இச்செயலியானது விஞ்ஞான கண்டுபிடிப்புகள், மற்றும் ஆய்வுகள் தொடர்பான தகவல்களை எமது மாணவர்கள் மத்தியில் பரவச் செய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டது.
சைபோட் அக்கடமி தமிழ் மண்ணில் உருவாகிவருகின்ற ஒரு சிறந்த கணணித் தொழில்நுட்ப மையமாக வளரும் என்ற நம்பிக்கை நிகழ்வில் வெளிப்பட்டது. இதனை உருவாக்கிய த கலைநீதனின் முயற்சிகளையும் அவருக்கு அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த லிற்றில் எய்ட் நிறுவனத்தையும் அனைவரும் பாராட்டினர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்; கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் லிற்றில் சை-கிட் அறிவியல் விளையாட்டுப்பொருளை விவரணப்படுத்தும் விளக்கும் செய்முறைகளும் நடைபெற்றன.