2003 ஆம் ஆண்டு தொடக்கம் நூறுகோடி மக்களின் எழுச்சி பிரச்சாரம் உலகந்தழுவிய வகையில் வருடாவருடம் பெப்ரவரி 14ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக எழுச்சி கொள்வோம் என்ற தொனிப்பொருளில், முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இவ்வெழுச்சி பிரச்சாரமானது இந்த வருடம் பெண்களின் உடல் பெண்களின் உரிமை எனும் தொனிப்பொருளின் பாற்பட்டு 2022.02.14 அன்று நாவற்குடா ஜீவஒளி விளையாட்டு மைதானத்தில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்கள், சமதை பெண்ணிலைவாத நண்பிகள் மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக்கலைஞர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடனும் நாவற்குடா சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் இணைவுடனும் நடைப்பெற்றிருந்தது.
உண்மையில் இத்தகைய எழுச்சிப் பிரச்சாரமானது அன்றைய நாளுக்கான நிகழ்வு மட்டுமல்ல; மாறாக எங்களுடைய வாழுதலில் பன்னெடுங்காலமாக வன்முறை என்று அறிந்தும் அறியாமலும் செய்கின்ற சொல்லுகின்ற விடயங்களை கேள்விக்குட்படுத்துவதும் எங்களுக்குள் மாற்றங்களை கொண்டு வருவதும் அதனூடாக சமத்துவமான வாழ்தலை நோக்கிய நீண்டநெடிய இலக்கினையுடைய எழுச்சி பிரச்சாரமாக அமைகின்றது.
ஆக இத்தகைய நீண்டநெடிய பயணத்தில், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினர் மத்தியில் இத்தகைய கருத்தாடல்களை உரையாடலுக்கு கொண்டுவர வேண்டிய தேவையும் கடப்பாடும் இருந்துக் கொண்டே இருக்கின்றது. இந்தவகையில் திருப்பெருந்துறை சிறுவர்களும் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்கள், சமதை பெண்ணிலைவாத நண்பிகள் ஆகியோரும் இணைந்து நூறுகோடி மக்களின் எழுச்சி பிரச்சாரம் 2022 இன் தொடர்ச்சியாக திருப்பெருந்துறை வாசுகிஜெயசங்கர் அவர்களின் இல்லத்தில் நேற்றைய தினம் 2022- 04-16 நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
பெண்களின் உடல் பெண்களின் உரிமை எனும் 2022இற்கான தொனிப்பொருளின் பாற்பட்டு திருப்பெருந்துறை சிறுவர்களும், மூன்றாவதுகண் நண்பர்களும் சமதை பெண்ணிலைவாத நண்பிகளும் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர். நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்… பாடலோடு ஆரம்பிக்கப்பட்டு சிறுவர்களின் அரசர் வரவாட்டம் (வடமோடி), சிறுமியரின் அரசியர் வரவாட்டம் (வடமோடி) சமதை பெண்ணிலைவாத நண்பிகளின் பறையிசையாற்றுகை, சிறுவர்களின் எல்லோரும் ஆடியே பாடுவோம்…. பாடல், மூன்றாவதுகண் நண்பர்களின் உன் தோழமையில் நான் இருக்கையிலே …. பாடல் (கம்லா பாசினின் பாடல்), சிறுமியரின் வீரராட்டம், மூன்றாவதுகண் நண்பிகளின் அல்லியின் எதிர்வாதம் மீளுருவாக்க கூத்தாற்றுகை, சிறுவர்களின் வானமெங்கும் வெள்ளை பூக்கள்… பாடல் மூன்றாவதுகண் நண்பர்களின் சமத்துவம் மற்றும் வாழி பாடல் என நிகழ்வுகள் அனைவரது பங்குபற்றலோடும் சந்தோசமான இணைவோடும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சிறுவர்கள், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்கள் மற்றும் சமதை பெண்ணிலைவாத நண்பிகள் என அனைவரும் இணைந்து பங்குபற்றிய குறித்த நிகழ்வில் பெண்களின் உடல் பெண்களின் உரிமை என்ற தொனிப் பொருளை மையமிட்ட வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக, சிறுவர்களாலும் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்களாலும் பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் உரிமை, சமத்துவம், உள்ளுர் அறிவுத்திறன், இயற்கையோடு இயைந்த வாழ்வு ஆகியவற்றை மையப்படுத்திய மூன்றாவதுகண் நண்பர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களாகவே அமைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
“… அன்பின் வழியிலே வாழ்வினை கூட்டி
வன்முறையற்ற வாழ்வினை ஆக்கி
இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று
வாழவேண்டும்”
என வன்முறையற்ற வாழ்தலின் அவசியத்தை வலியுறுத்தி நின்றமை அவதானிக்க முடிந்தது.
சமதை பெண்ணிலைவாத நண்பிகளால் ஆற்றுகைச் செய்யப்பட்ட பறை இசை ஆற்றுகை, எங்களுடைய பண்பாடுகள் பெண்கள் மீது சுமத்தியுள்ள பொருளற்ற கட்டுகளை உடைத்து பறையறைந்து மகிழவும் கொண்டாடவுமான தளத்தை பெண்களாக உருவாக்கிக் கொள்வதன் ஊடாக சமத்துவமான வாழ்தலை நோக்கி பயணப்படுதலும், பெண்கள் தொடர்பான வழமையான கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு பெண்களின் உடல் உழைப்பை அவர்களின் விருப்பை, உரிமையை வெளிப்படுத்தவும் கொண்டாடி மகிழவும் தளத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்தலும் என்ற நோக்கின் பாற்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
வழமையான எங்களது பண்பாடுகள், புராண இதிகாச கதைகள் பெண்களை சித்திரப்பாவையாக கட்டமைத்து விடுவதில் வலுவானதொரு நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இவை காலத்தின் தேவையை உணர்ந்து மீளுருவாக்கஞ் செய்யப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இந்நிலையில் குரல் மறுக்கப்பட்ட அல்லி என்ற மகாபாரத இதிகாச பாத்திரம், அல்லியின் எதிர்வாதம் மீளுருவாக்க கூத்தில் தன்னுரிமை உரக்கச் சொல்லியவளாக மீளுருவாக்கப்பட்டிருந்தாள். பெண்களின் உடல் பெண்களின் உரிமை என்ற தொனிப்பொருளின் பாற்பட்டு
“பெண் என்றாலே போகப் பொருள்
என்றே – அர்ச்சுனன்
நினைப்பதை நான் உடைத்தெறிவேன்
இங்கே”
என அல்லியின் எதிர்வாதம் மீளுருவாக்க கூத்தாற்றுகை ஊடாக, பெண்கள் உரிமை பேசப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கமலாவாசுகி (வாசுகி ஜெயசங்கர்) அவர்களால், நமது நாட்டின் சமகால நிகழ்வுகளை உணரந்து, அறிந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் ஊடாக சிறந்த ஆளுமைகளாக உருவாக வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொனிப்பொருளின் பாற்பட்டு முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில், சிறுவர்களின் பங்குபற்றல் என்பது முக்கியமானது. ஏலவே குறிப்பிட்டது போல பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக எழுச்சி கொள்வோம் என்பது பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது எனினும், எங்களுடைய பாரம்பரியம் சார்ந்தும் பண்பாடு சாரந்தும் பெண்கள் மீது கட்டப்பட்டுள்ள அல்லது சுமத்தப்பட்டுள்ள ஆணாதிக்கக் கட்டுக்களை அப்படியே வைத்துக் கொண்டு பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் முன்னெடுக்க முனைப்பு காட்டுவதில் அத்துனை பொருத்தப்பாடுகள் இருப்பதாக உணரமுடியவில்லை. இந்நிலையிலேயே திருப்பெருந்துறை OBR நிகழ்வுகள் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரதும் இணைவோடு எங்களுடைய பண்பாடு பெண்கள் மீது சுமத்தியுள்ள கட்டுக்களை, கட்டுடைத்தலின் அவசியத்தின் நிமித்தம் அத்தகைய கட்டுடைப்புகளை கொண்டாடுகின்ற, ஒருமனதாக ஏற்கவிரும்புகின்ற சமூக இணைவினை வலியுறுத்திச் சொல்வதாக நிழலாடிச் சென்றன.