Home உலகம் இலங்கையின் வழியில் நேபாளமும் வீழ்கிறதா?

இலங்கையின் வழியில் நேபாளமும் வீழ்கிறதா?

by admin

இலங்கை போல் நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடியா ? – இந்தியா, சீனா உதவுமா ?

நேபாளத்தின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள, முதலில் சில புள்ளிவிவரங்களைப் தெரிந்துகொள்வது அவசியம்.

• நேபாளத்தின் மக்கள் தொகை சுமார் 2.9 கோடி

• பொருளாதாரம் சுமார் 3,500 கோடி டாலர்

• பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43 சதவீதம்

• பணவீக்கம் தற்போது 7 சதவீதம்

2022 மார்ச் மத்தியில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெறும் 975 மில்லியன் டாலராகக் குறைந்தபோது எச்சரிக்கை மணி அடித்தது. ஜூலை 2021 இல், இது $ 1175 மில்லியனாக இருந்தது.

சுமார் ஏழு மாதங்களில், நேபாளத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பில் சுமார் 200 மில்லியன் டாலர் அதாவது 24 ஆயிரம் கோடி நேபாள ரூபாய் குறைந்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயம் மற்றும் பிற சொத்துக்களைத் தன் வசம் வைத்திருக்கிறது.

வெளிநாட்டு நாணயம் பெரும்பாலும் டாலரில் குறிப்பிடப்படுகிறது. தேவைப்படும்போது அதிலிருந்து பாக்கியும் செலுத்தப்படுகிறது. ஒரு நாடு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது, அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்குகிறது.

குறையும் அந்நிய செலாவணி கையிருப்பு

பொதுவாக ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது 7 மாத இறக்குமதிக்குப் போதுமானதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

நேபாளத்தின் அன்னியச் செலாவணி கையிருப்புத் திறன் தற்போது 6.7 மாதங்களுக்குத் தான் இருப்பது கவலைக்குரிய விஷயம். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் சிலர் நேபாளத்தை இலங்கையுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம், ஏப்ரல் தொடக்கத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் மகாபிரசாத் அதிகாரியை இடைநீக்கம் செய்தது. நிலைமையை மேம்படுத்த, ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும் நேபாளம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேபாளம் தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது.

நேபாளத்தின் பொருளாதாரத்தில் இறக்குமதி-ஏற்றுமதி என்று வரும்போது, நேபாளத்திற்கு இரண்டு வர்த்தகப் பங்காளிகள் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர். முதலில் இந்தியா இரண்டாவது சீனா.

இதற்குக் காரணம், நேபாளம் இந்தியாவுடனான வெளிநாட்டு வர்த்தகத்தில் 62 சதவீதமும், சீனாவிடம் இருந்து சுமார் 14 சதவீதமும் செய்கிறது.

பெரும்பங்கு வகிக்கும் இந்தியா

2019-20 ஆம் ஆண்டிற்கான நேபாள தேசிய வங்கியின் தற்காலிகத் தரவுகளைப் பார்க்கும்போது, நேபாளம் சுமார் 10600 மில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகம் செய்துள்ளது. இதில், இறக்குமதிகள் சுமார் 9800 மில்லியன் டாலர்கள் மற்றும் ஏற்றுமதிகள் சுமார் 800 மில்லியன் டாலர்கள்.

நேபாளம் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் மொத்த பொருட்களில் 70 சதவீதம் இந்தியாவில் இருந்து வருகிறது. இதன் பொருள் நேபாளம் தனது இறக்குமதியில் 70% இந்தியாவிலிருந்து செய்கிறது. இது 2019-20 ஆம் ஆண்டில் சுமார் 6200 மில்லியன் டாலர்களாக இருந்தது.

நேபாளம் இந்தியாவில் இருந்து அதிகபட்ச வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், காய்கறிகள், அரிசி, பெட்ரோலியப் பொருட்கள், இயந்திரங்கள், மருந்துகள், MS பில்லெட்டுகள், எஃகு, மின்சாரப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை வாங்குகிறது.

ஏற்றுமதி என்று பார்த்தால், 2019-20 ஆம் ஆண்டில், இந்தியா நேபாளத்திடம் இருந்து சுமார் 57 மில்லியன் டாலர்களை வாங்கியது. இதில் முக்கியமாக ஏலக்காய், சாறு, சணல், ஆயுர்வேத மருந்துகள், எண்ணெய் கேக், பாமாயில் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும்.

நேபாளம் - பொருளாதார நெருக்கடி

சீனாவில் இருந்து வரும் பொருட்கள்

இந்தியாவிற்கு அடுத்தபடியாக, நேபாளம் அதிக வர்த்தகம் செய்யும் நாடு என்றால் அது சீனாதான்.

2019-20 ஆம் ஆண்டில், நேபாளம் சீனாவிலிருந்து சுமார் 149 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி, 1 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்றது.

நேபாளம் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பாகங்கள், வீடியோ தொலைக்காட்சி, இரசாயன உரங்கள், மின்சாதனப் பொருட்கள், இயந்திரங்கள், மூலப் பட்டு, ஆயத்த ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் வாங்குகிறது.

அதே நேரத்தில், கைவினைப் பொருட்கள், கம்பளி தரைவிரிப்புகள், கோதுமை மாவு மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற பொருட்கள் சீனாவிற்கு விற்கப்படுகின்றன.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நேபாளம் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை தற்போது கொண்டுள்ளது. நேபாளத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிக சுமையாக இருப்பதற்கு இதுவே காரணம்,

ஏனெனில் வெளிநாட்டு வர்த்தகத்தில் கொள்முதல், டாலர்களைக் கொண்டு மட்டுமே செய்யப்படுகிறது. ஒரு நாடு தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு எவ்வளவு அதிகமாக விற்கிறதோ, அவ்வளவு அதிகமாக அந்நியச் செலாவணி கையிருப்பை நிரப்புகிறது.

நேபாளம் - பொருளாதார நெருக்கடி

பொருளாதாரச் சீரழிவிற்கு என்ன காரணம்?

நேபாளத்தின் வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக்குறை ஏன் அதிகமாக உள்ளது? நேபாளத்தின் பொருளாதாரம் சீரழிந்து வருவதற்கு இது மட்டும் முக்கிய காரணமா ? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?

நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஹரிபன்ஷ் ஜா, இது குறித்து விளக்குகிறார். “கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அண்டை நாடுகளுடனான நேபாளத்தின் உறவுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சீனாவுடனான வர்த்தக உறவுகள் வேகமாக மாறி வருகின்றன. சீனப் பொருட்கள் நேபாளத்தில் வேகமாக விற்பனையாகின்றன ஆனால் நேபாளத்தால் அதன் பொருட்களை சீனாவில் வேகமாக விற்க முடியவில்லை.

நேபாள எல்லையில் கொரோனா தொற்று பரவியதில் இருந்தே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு முன்பு, ஒரு நாளில் நூற்றுக்கணக்கான லாரிகள் எல்லையை கடக்கும், ஆனால் தொற்றுநோய்க்குப் பிறகு, ஒரு நாளைக்கு 5 முதல் 10 லாரிகள் மட்டுமே கடக்க முடியும். இதனால் நேபாளத்தால் இந்தியா மற்றும் சீனாவுடன் வர்த்தகம் செய்ய முடியவில்லை.

நேபாளம் - பொருளாதார நெருக்கடி

சுற்றுலாத் துறை பாதிப்பு

நேபாளத்தின் வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரமாக சுற்றுலா உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திற்கு வருகை தருகின்றனர், இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில், நேபாளத்திற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 2019 ஆம் ஆண்டில் சுமார் 11 லட்சமாகக் குறைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், நேபாளத்திற்கு வந்தவர்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது, அதே சமயம் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் நேபாளம் வந்தனர்.

நேபாளம் - பொருளாதார நெருக்கடி

கொரொனாவிற்குப் பிறகு, நேபாளத்தின் எல்லை நீண்ட காலமாக மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திற்குச் செல்ல முடியவில்லை. கொரொனாவிற்குப் பிறகு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தின் முக்கிய வருமான ஆதாரமாகச் சுற்றுலா உள்ளது.

பிபிசி நேபாள சேவையின் நிருபர் சஞ்சய் தாகலின் கருத்துப்படி, “சீனாவில் இருந்து மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது”.

காத்மண்டூ போஸ்ட் செய்தியின்படி, நேபாளம் 2018-19 இல் சுற்றுலா மூலம் 75 பில்லியன் நேபாள ரூபாய்களை ஈட்டியது என்றும் இது 2020-21 இல் வெறும் 7 பில்லியன் நேபாள ரூபாயாகக் குறைந்துள்ளது என்றும் காத்மண்டூ போஸ்ட் இதழ் தெரிவிக்கிறது. கொரோனா பெருந்தொற்று நோய்களின் போது, நேபாளத்தின் சுற்றுலா வருவாயில் 90 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமாக சுற்றுலா உள்ளது.

சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில், நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக நேபாள நிதி அமைச்சர் ஜனார்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தலில் பெரும் சரிவு

நேபாளத்தின் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருப்பதில் பணம் செலுத்துதல் பெரும் பங்கு வகிக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதி பணம் செலுத்துவதில் இருந்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் தங்கள் நாட்டுக்குப் பணத்தை அனுப்பினால், அது பணம் அனுப்புதல் என்று அழைக்கப்படுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர்.

வெளிநாட்டு விவகார நிபுணரும், தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூட்டின் தலைவருமான ராபிந்திர சச்தேவ் கூறுகையில், “கோவிட் காலத்தில் நிறைய வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பணம் அனுப்புவதில் ஐம்பது சதவீதம் குறைந்துள்ளது.

சுமார் 800 கோடி டாலர்கள் நேபாளத்திற்குப் பணம் அனுப்புவதன் மூலம் ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்தது, இது சுமார் 450 கோடி டாலர்களாகக் குறைந்துள்ளது. இது நேபாளத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”

நேரடி அந்நிய முதலீட்டில் சரிவு

2015ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, நேபாளத்தில் 90 சதவீத அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து மட்டுமே வருகிறது. இந்த முதலீடுகள் நீர் மின்சாரம், சிமெண்ட், மூலிகை மருத்துவம் மற்றும் சுற்றுலா துறைகளில் உள்ளன.

2019-20 ஆம் ஆண்டில், நேபாளத்தில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 95 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வர இருந்தது, அதில் 88 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சீனாவால் மட்டுமே உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா தொற்று மற்றும் நேபாளத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மைக்கு இடையே, அதில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, நேபாளத்தில் இந்தியாவில் இருந்து முதலீடு செய்ததில் சுமார் 80 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

நேபாளம் - பொருளாதார நெருக்கடி

அமெரிக்க முதலீடுகளால் சீனா கோபம்

நேபாளத்தில் சீனாவின் ஆர்வம் குறைவதற்கு அமெரிக்கா மற்றொரு முக்கிய காரணம், அமெரிக்காவுக்கும் நேபாளத்துக்கும் இடையே 50 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் 2017ல் கையெழுத்தானது.

‘மிலேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் நேபாளத்தின் (எம்சிசி-நேபால்)’ கீழ், இங்குள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த அமெரிக்கா 50 கோடி டாலர்களை வழங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தில், நேபாளத்தில் அதி உயர் மின்னழுத்த டிரான்ஸ்மிஷன் லைன் ஒன்றை அமெரிக்கா அமைக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாள நாடாளுமன்றம் இரண்டு ஆண்டுகளுக்குள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவத்திற்கு நேபாள அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகள் நேபாளத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், அந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இது தாமதமானது, ஆனால் இது இறுதியாக 2022 இல் அங்கீகரிக்கப்பட்டது.

சீனா, அமெரிக்காவுக்கு எதிராக வெளிப்படையாக எதுவும் கூறவில்லை, ஆனால் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீனா, நேபாளத்தின் இறையாண்மை மற்றும் நலன்களை விலையாகக் கொண்டு செய்யப்படும் சுயநல நடவடிக்கைகள் மற்றும் விரோத ராஜதந்திரம் ஆகியவற்றை எதிர்க்கிறது” என்றார்.

நேபாளத்தில் அதிகரித்து வரும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனா மற்றும் நேபாளத்தின் இடையேயான உறவுகளையும் சற்று பாதிக்கிறது என்றால் அது மிகையாகாது.

  • அபினவ் கோயல்
  • பிபிசி நிருபர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More