தேநீர் மற்றும் வடை போன்றவற்றை உண்பதற்கே அதிக பணங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிஷாந்தன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி என்பது நாடு முழுவதும் உள்ள மக்களை பாதித்தாலும் அதிக அளவில் தென்னிலங்கையையே பாதிக்கின்றது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பது யதார்த்தமான உண்மை. இன்றுதான் தென்னிலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.
யுத்தம் மௌனிக்கப்பட்டு 13 வருடங்கள் கடந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைகளால் மக்கள் சரியான துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். குறிப்பாக வடகிழக்கில் இது அதிக தாக்கத்தைச் செலுத்தி வருகின்றது. பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளும் அரசியல் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கவலையான விடயம்.
குறிப்பாக உணவு விற்பனை நிலையங்களை எடுத்துக் கொண்டால் ஒரு தேநீர் மற்றும் வடை போன்றவற்றை உண்பதற்கே அதிக பணங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும். தற்போது அதிகளவான லாபத்திற்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
மனச்சாட்சிக்கு விரோதமாக உணவக உரிமையாளர் செயற்படுகின்றார்கள். இதனை நாம் குறை கூறவில்லை ஆனால் திருத்திக்கொள்ள வேண்டும். சாதாரணமாக வடைக்கும் பரோட்டாவுக்குமான விலை என்பது 100 ரூபாய் வரை போவது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றார்.