யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் மாநகரில் கடந்த ஒரு வாரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த கும்பல் நூதனமான முறையில் இளைஞர்களை மறித்து தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய படத்தை பணப்பையில் (பேஸில்) வைத்திருப்பதாகவும் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்து அலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் தப்பித்து வந்துள்ளது.
இந்த நிலையில் 4ஆவது சம்பவமாக யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இளைஞர் ஒருவரை அதே பாணியில் அச்சுறுத்தி 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான அலைபேசியை இருவர் அபகரித்துச் சென்றனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இருவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்