கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் ஒருவர் பதிலளித்தார்.அரசியல் சிவில்,சமூக செயற்பாட்டாளரான அவர் அண்மையில் கோட்டாகோகம கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அவர் தரும் தகவல்களின்படி ரணவிரு குடிலில் அமர்ந்திருக்கும் படைவீரர்கள் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதில் இணைந்து செயற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.அவர்கள் யுத்தவெற்றியை ஒரு அரசியல் முதலீடாக முன்னெடுக்கும் ராஜபக்சக்களின் யுத்த வெற்றிவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் அவர்களை யுத்த வெற்றி வாதத்திற்கூடாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் நண்பர் கூறினார்.
எனினும்,ரணவிரு குடிலை அக்கிராமத்தில் உருவாக்க காரணம் அரசாங்கம் முன்னெடுக்ககூடிய முறியடிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கும்தான் என்ற ஒரு விளக்கம் உண்டு. இலங்கை தீவு ஏற்கனவே மூன்று தடவைகள் தன் சொந்த இளையோரின் ரத்தத்தில் குளித்த ஒரு நாடு. ஜே.வி.பியின் இரண்டு ஆயுதப் போராட்டங்கள், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்று கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் இலங்கைத்தீவு மூன்று தடவைகள் தனது சொந்த மக்களின் ரத்தத்தில் குளித்த ஒரு நாடு.எனவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் குறிப்பாக பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையின் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்காது என்று நூறுவீதம் நிச்சயமாகக் கூற முடியாது.
ஆனால், அவ்வாறு நசுக்குவது என்றால் அதை தொடக்கத்திலேயே செய்திருந்திருக்க வேண்டும். இப்பொழுது அது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறியிருக்கும் பின்னணியில்,குறிப்பாக கொழும்பின் மையத்தில், தூதரகங்களின் மத்தியில் அக்கிராமம் அமைந்திருப்பதனால் அதனை இனி இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது கடினமானதாக இருக்கும் என்றும் ஒரு விளக்கம் உண்டு.
எனினும் அரசாங்கத்தின் முறியடிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு ஒரு தற்காப்பு ஏற்பாடாக கிராமத்தில் குடியிருப்பவர்கள் ரணவிரு குடிலை அங்கு அமைத்திருக்கலாம் என்றும் கருதலாம்.தாங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல தமது போராட்டம் தேசத்துரோகமானது அல்ல என்பதனை அவர்கள் நிரூபிக்க முற்படுகிறார்கள். அவர்கள் கைகளில் சிங்கக் கொடிகளை ஏந்தி வைத்திருப்பதும் அவ்வாறான ஒரு தற்காப்பு உள்நோக்கத்தை கொண்டதா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பில் உண்டு.
இவ்வாறானதொரு பின்னணியில் கோட்டா கோகம கிராமத்தில் ரணவிரு குடில் உருவாக்கப்பட்ட பின் அங்கே மனிதஉரிமை செயற்பாட்டாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான ஒரு குடிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ரணவிரு கிராமத்தை சமன் செய்யும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
எதுவாயினும் இப்படிப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் கோட்டா கோகம கிராமத்தில் கூடியிருப்பவர்களோடு தமிழ்த் தரப்பு உரையாட வேண்டும். இப்பொழுது நொந்து போயிருக்கும் படித்த சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை உலுப்பும் விதத்தில் தமிழ்த் தரப்பு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.அதன்மூலம் சிங்களப் பொது உளவியலைக் கூட்டுக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டும். அவ்வாறு சிங்களப் பொது உளவியலின் கூட்டுக் குற்றவுணர்ச்சியைத் தூண்டவில்லை என்றால் இலங்கைத் தீவுக்குள் இரண்டு இனங்களும் எந்த ஒரு இணக்கத்துக்கும் போகமுடியாது. எனவே கோட்டா கோகம கிராமத்தோடு தமிழ்த்தரப்பு உரையாட வேண்டும்.அதன் பொருள் மெய்மறந்து இணைந்து போராட வேண்டும் என்பதல்ல. முதலில் உரையாட வேண்டும்.
குறிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் மே மாதம் தொடங்குகிறது.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது நினைவு கூர்தலுக்கான மாதம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்மக்களின் நினைவுகூரும் கூட்டுரிமை மறக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் நிலைப்பாடு என்ன?
இப்போதுள்ள நிலைமைகளின்படி ஜனாதிபதி வீட்டுக்குப் போகக்கூடிய நிலைமை இன்னமும் தோன்றவில்லை.அதேசமயம் பௌத்த மகா நாயக்கர்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி உருவாக்கக்கூடிய இடைக்கால ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகள் இணையுமா என்பதும் சந்தேகமே. இந்நிலையில் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டு காலிமுகத்திடலில் கூடியிருப்பவர்கள் மே மாதம் வருவதற்கு இடையில் வீட்டுக்கு போகக்கூடிய விதத்தில் திருப்திகரமான மாற்றங்கள் ஏற்படுமா என்பது சந்தேகமே.அவ்வாறு அக்கிராமம் மே 18ஆம் திகதியும் அங்கே இருக்குமாக இருந்தால் நினைவுகூர்தல் தொடர்பாக அக்கிராமத்தில் இருப்பவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியிருக்கும்.
கோட்டா கோ கம கிராமத்தில் நினைவுகூர்வதற்கு இடம் இருக்குமா?அல்லது நினைவுகூர்தல் தொடர்பாக கோட்டா கோகம கிராமத்தில் இருப்பவர்களின் கருத்து என்ன?அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
கடந்த ஆண்டு சஜித் பிரேமதாச நினைவுகூர்தல் தொடர்பாக தமிழ் மக்களுக்கு சாதகமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்கள் துப்பாக்கியின் நிழலில்தான் நினைவுகூர முடிகிறது. கடந்த ஆண்டு மட்டக்களப்பில் நினைவுகூர்தலை அனுஷ்டித்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு,கடந்த திங்கட்கிழமைதான் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே நினைவுகூர்தல் தொடர்பில் கோட்டா கோகம கிராமத்தில் இருப்பவர்களின் தார்மீக நிலைப்பாடு என்ன என்பதனை அறிவது அவசியம். அக்கிராமத்தில் இருப்பவர்கள், மற்றும் அக்கிராமத்தை எதிர்ப்பின் மையமாக கருதுபவர்கள் அனைவரும் தமிழ்மக்களின் நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது. அந்நிலைப்பாடு தமிழ் மக்களை அக்கிராமத்தை நோக்கி போவதா இல்லையா என்ற முடிவை எடுக்க உதவக்கூடும்.தென்னிலங்கையில் நிகழும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விலகி நின்று சாட்சிகளாகக் காணப்படும் தமிழ்மக்களின் மனதை மாற்ற அது உதவக்கூடும்.
இதுவிடயத்தில் தமிழ் தரப்பிலிருந்து யாராவது கோட்டா கோகம கிராமத்தோடு உரையாடினால் என்ன ?
இலங்கைத் தீவில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவது என்றால் அதற்கு தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்தால்தான் உண்டு.அதைத் தனிய சிங்கள மக்களால் செய்ய முடியாது என்பதைத்தான் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் உணர்த்தியது.இப்பொழுதும் அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்துக்கு மூன்று இனங்களும் இணையவேண்டும்.
ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் பெரும்பாலானவர்கள் ஒரு குடும்பத்தை ஆட்சியில் இருந்து அகற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று கருதுவதாக தெரிகிறது.அவர்கள் தமது எதிர்ப்பு முழுவதையும் ஒரு குடும்பத்தின் மீதே குவிக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக பசில் ராஜபக்ஷவின் மீது முழு வெறுப்பையும் காட்டுகிறார்கள்.பசில் ராஜபக்சவை ஒரு காகமாக உருவகித்து அவர் மீது தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில் தாக்கி வருகிறார்கள்.கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான காகச்சிலையை செய்து அதன் கழுத்தில் குரக்கன் சால்வையைக் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.பூமிகா ஜெயசிங்க என்ற ஓவியர் காகத்தை குரக்கன் சால்வையோடு கழிப்பறைக் குழிக்குள் வைத்து ஓவியம் வரைந்திருக்கிறார்.பெரியவர்கள் தொடக்கம் சிறுகுழந்தைகள் வரையிலும் காகம் என்றால் பஸில் என்று நக்கலடிக்க காணலாம்.
ஆனால் இங்கு பிரச்சினை ஒரு பசில் ராஜபக்ஷ மட்டுமல்ல. அவர் பத்து வீதம் கொமிஷன் பெற்றதால் மட்டும் நாடு கெட்டுப் போகவில்லை. அல்லது ஏனைய ராஜபக்சக்கள் கொள்ளை அடித்ததால் மட்டும் நாடு கெட்டுப் போகவில்லை. இந்த எல்லா ராஜபக்சக்களும் எப்படி ஒரேயடியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தார்கள்?என்ற கேள்வியை சிங்களமக்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும்.யுத்தவெற்றிதான் அதற்கு அடிப்படைக் காரணம்.தமிழ் மக்களுக்கு எதிராக பெற்ற வெற்றிதான்.அதாவது இனவாதம்.இனவாதத்தை முதலீடு செய்துதான் ஒரு குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த குடும்பம் மட்டுமல்ல இதற்கு முன்னரும் கொழும்பை யார் ஆட்சி செய்வது என்பதனை இனவாதம்தான் பெருமளவுக்கு தீர்மானித்திருக்கிறது.அதுதான் இலங்கைத்தீவின் சிங்கள-பௌத்த அரசுக் கட்டமைப்பின் அடிப்படைப் பண்பு. அதை மாற்ற வேண்டும்.அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாரா? எதிர்க்கட்சிகள் தயாரா?
தமிழ் மக்கள் கேட்கும் மாற்றம் என்பது நாடாளுமன்றத்தில் இப்பொழுது நடப்பது போன்ற அரசியல் சங்கீதக்கதிரை விளையாட்டு அல்ல.அரசாங்கம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.பௌத்த மகா நாயக்கர்களின் எச்சரிக்கையையடுத்து ஜனாதிபதி மீண்டும் அவ்வாறான ஒரு சங்கீதக்கதிரை விளையாட்டுக்கு தயாராகி வருகிறார்.அதை இன்னும் திருத்தமான வார்த்தைகளில் சொன்னால் இப்போது இருக்கும் யாப்புக்குள், இப்போதுள்ள நாடாளுமன்றத்துக்குள்,என்னதான் மாற்றத்தைச் செய்ய முற்பட்டாலும் அது ஒரு சங்கீதக்கதிரை விளையாட்டாகத்தான் முடியும்.எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்க வேண்டியது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை.அதுதான் அவர்களுக்கும் நிரந்தர மீட்சியைக் கொடுக்கும். அதைத்தான் தமிழ்மக்களும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டுவருகிறார்கள்.
கோட்டா கோகம கிராமத்தில் தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டது. ஒரு நல்ல சகுனம்தான்.எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டது ஒரு நல்ல சகுனம்தான். ஆனால் தமிழ் மக்களை இது போன்ற சீர்திருத்தங்களால் மட்டும் திருப்திப்படுத்த முடியாது.ஏனெனில் தமிழ்மக்களின் சந்தேகங்கள் நூற்றாண்டு காலத்துக்குரியவை.காயங்கள் ஆழமானவை, இப்பொழுதும் ஆறாதவை.
தமிழ் மக்கள் வாகனத் தகட்டு இலக்கங்களில் பொறிக்கப்பட்ட சிங்களச் சிறீ எழுத்து,சிங்கக்கொடி,தேசியகீதம் எல்லாவற்றுக்கும் எதிராக ஒருகாலம் போராடினார்கள். இப்பொழுது இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.சின்னச்சின்ன சீர்திருத்தங்களைக் கேட்டு அல்ல.
சிங்கள பௌத்த மேலாண்மையை பாதுகாக்கும் ஒற்றையாட்சி கட்டமைப்பை உடைத்து பல்லினத்தன்மைமிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்புவதே தமிழ்மக்கள் கேட்கும் கட்டமைப்பு மாற்றம் ஆகும்.காகச்சிலையை தெருத்தெருவாக இழுத்துச்செல்லும் சிங்களமக்கள் இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்களா?
அண்மையில் மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவு தினம் வந்தது.அந்த நினைவு நாளை அனுஷ்டிக்கக் கூடியவர்கள் என்று அரசாங்கம் இனங்கண்ட ஒரு தொகுதி அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தடையுத்தரவுகள் விநியோகிக்கப்பட்டன.அதே சமயம் கடந்த ஆண்டு நினைவு கூர்தலை அனுஷ்டித்த பத்துபேர் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின்பின் இந்த வாரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.தென்னிலங்கை குழம்பிப் போயிருக்கும் ஒரு பின்னணியில் இம்முறை மே 18ஐ நினைவு கூர்வது தொடர்பில் அரசாங்கம் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்?ஆனால் அதைவிட முக்கியமானது, இப்பொழுது அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சிங்கள மக்கள் அது தொடர்பாக என்ன முடிவெடுப்பார்கள் ?