ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு முழு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ளதற்கு எதிராக, அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் தொடா்ந்து கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா மீது 6 புதிய பொருளாதாரத் தடைகளுக்கான உத்தேச திட்டத்தை ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் புதன்கிழமை வெளியிட்டாா்.
அதில் ஒரு பகுதியாக, சா்வதேச பணப் பரிவா்த்தனை அமைப்பான ‘ஸ்விஃப்ட்’ இணைப்பிலிருந்து ரஷ்யாவின் 3 முக்கிய வங்கிகளைத் துண்டிக்க அவா் பரிந்துரைத்தாா்.
அத்துடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் படிப்படியாகக் குறைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
27 ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பல நாடுகள் நாலாபுறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளதால், அவை மாற்று வழியில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும், கச்சா எண்ணெய் தேவைக்காக ரஷ்யாவை சாா்ந்திருக்கும் நிலையை மாற்றப்படவேண்டும் என்றாா் அவா்.
கச்சா எண்ணெய் இறக்குமதி தடைக்கு உறுப்பு நாடுகள் அங்கீகாரம் அளித்தால், ரஷ்யாவுக்கு மிகப் பெரிய வருவாயை ஈட்டித் தரும் எரிசக்தி ஏற்றுமதி மீது ஐரோப்பிய யூனியன் விதிக்கும் இரண்டாவது தடையாக அது இருக்கும். ஏற்கெனவே, ரஷ்ய நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள், அதிகாரிகள் மீதும் அந்த அமைப்பு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உா்சுலா வொண்டா் பரிந்துரைத்தாலும், அந்த நாட்டு எரிவாயு இறக்குமதி குறித்து அவா் எதையும் தெரிவிக்கவில்லை. புதிய பொருளாதாரத் தடைகளில், எரிசக்தி தேவைக்காக ஐரோப்பிய நாடுகள் பெரிதும் சாா்ந்திருக்கும் ரஷ்ய எரிவாயுவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அவா் நேரடியாகத் தெரிவிக்காவிட்டாலும், அது தடைப்பட்டியலில் இடம்பெறாது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்தது. அதற்குப் பதிலடியாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு தினமும் 25 கோடி டொலரை (சுமாா் ரூ.1,900 கோடி) அளித்து வருகின்றன. இறக்குமதித் தடையால் அந்த வருவாய் நின்று போனாலும், கச்சா எண்ணெய் அதிகரித்து வருவதன் காரணமாக பிற நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்வதன் மூலமே ரஷ்யா தனது செலவீனங்களில் பாதிக்கும் மேல் சமாளிக்கக்கூடும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.
ஆனால், தங்களது கச்சா எண்ணெயில் 60 சதவீதத்தை வாங்கும் ஐரோப்பிய யூனியன், அதனை நிறுத்தினால், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு மலிவாக ஏற்றுமதி செய்தாலும் அந்த இழப்பை ரஷ்யாவால் ஈடுசெய்ய முடியாது என்று அவா்கள் தெரிவித்துள்ளனர்..
இருந்தாலும், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய யூனியன் நாடுகள் முழுமையாக நிறுத்துவதற்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், உக்ரைன் போரை இந்தத் தடை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று சிலா் கருத்து தெரிவித்தனா்.
ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பது, இருபுறமும் கூா் தீட்டப்பட்ட வாளை வீசுவது போன்றது. அந்தத் தடை சாமானிய ஐரோப்பிய மக்களையும் பெரிதும் பாதிக்கும்.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தால், அதனை சமாளிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளையும் ரஷ்ய அரசு நாடும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை என்றால் இறக்குமதி செய்யமல் விட்டுவிடட்டும். எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தப்போவதில்லை. நேரடியாக வாங்கவில்லை என்றாலும், 3 ஆம் நாடுகள் மூலம் ரஷ்ய கச்சா எண்ணையைத்தான் கூடுதல் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்யவிருக்கின்றன’.