Home இலங்கை “சிட்னி முருகன் மண்டப, தவில் நாதஸ்வரக் கச்சேரியும் என் சிந்தனை வெளிப்பாடும்”

“சிட்னி முருகன் மண்டப, தவில் நாதஸ்வரக் கச்சேரியும் என் சிந்தனை வெளிப்பாடும்”

by admin

27.3.2022 இல் சிட்னிமுருகன் ஆலயக் கல்வி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தவில் நாதஸ்வரக் கச்சேரிக்குச் சென்று வந்தபின்னர் என்னுள் ஏற்பட்ட சிந்தனைகளிலிருந்து ஒரு துளி…

இணுவையூர் கார்த்தியாயினி (நடராஜா) கதிர்காமநாதன்.

கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு வருடங்களும் உலகின் இருண்ட காலப்பகுதி என்று சொல்லலாம். மனதிற்கு அமைதியை அளிக்கக் கூடிய அல்லது மகிழ்ச்சியைத் தரக்கூடிய எந்த ஒரு நிகழ்வையும் நடத்த முடியாத ஒரு அவலம். உறவுகள் நண்பர்களோடு கூட மகிழ்வையோ துக்கத்தையோ அருகிருந்து பகிர்ந்து கொள்ள முடியாத துயரம். உலகத்தோடு ஒட்டி மக்களின் சுகாதாரத்தைப் பேண வேண்டி 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய சிட்னி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தடைப்பட்டுப் போனது. 2021 ஆம் ஆண்டு மகோற்சவம் பல சுகாதாரக் கட்டுபாடுகளுடன் குறிப்பிட்ட பக்தர்கள் தொகையுடன் அமைதியாக நடைபெற்றது. ஆயினும் ஒவ்வொரு வருட மகோற்சவத்தின் போதும் அழைப்பது போன்று தவில் நாதஸ்வரக் கலைஞர்களை இலங்கையில் இருந்து அழைக்கமுடியாமற் போனது கவலைக்குரிய விடயமே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


இந்த ஆண்டு மார்ச் மாதம் 08.03.22 தொடக்கம் 19.03.22 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இசைவிருந்து அளிப்பதற்காகத் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை அழைப்பது பற்றிய ஆலோசனைகளும் முயற்சிகளும் சுகாதாரக் கட்டுப்படுகள் தளர்த்தப்பட்ட பின்னரே சிட்னி முருகன் ஆலயச் சைவமன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. இதனாற் குறுகிய காலத்திற் கலைஞர்கள் சிட்னிக்கு வருவதற்கான விசாவைப் பெற்றுக் கொள்வதில் நிறையச் சவால்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. சமூகத்திற்கு நன்மை தரும் பயனுள்ள நல்ல காரியங்களைச் செய்வதற்கு முயற்சி செய்தல் என்பது மிகவும் முக்கியம். அது நடப்பதும் நடக்காமல் விடுவதும் இறைவன் சித்தம். எல்லாவற்றையும் தாண்டி ‘முயற்சி திருவினையாக்கும்’; என்ற பழமொழிக்கு இணங்க சைவமன்றத் தலைவர் திரு. கமலசிறி வேலுப்பிள்ளை, செயலாளர் திரு எம்.தில்லைநடேசன், பொருளாளர் திரு. ரட்ணகுமார் கார்த்திகேசு, ஆகியோரின் அனுசரணையுடன் கலாச்சாரப் பொறுப்பாளர் திரு விமலராஜன் தர்மபாலனின் விடாமுயற்சி, துரிதமான செயற்பாடு, கலைஞர்களை எப்படியும் மகோற்சவத்திற்கு வரவழைத்து விடவேன்டும் என்பதிற் காட்டிய உறுதி ஆகியவற்றுடன் சிட்னி முருகனும் துணை நின்றதால் மகோற்சவம் ஆரம்பித்து இரண்டு நாட்களிற்; இலங்கைக் கலைஞர்கள் சிட்னி முருகன் ஆலயமகோற்சவத்தில் இசைவிருந்து அளிக்க வந்துவிட்டனர்.


சிட்னியிலுள்ள அனைத்து இந்துக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த மகோற்சவத்திற்கு நானும் எனது குடும்பத்தினரும் இம்முறை செல்லமுடியவில்லை என்பதும், நீண்ட நாட்களுக்குப் பின் நடைபெற்ற மங்கள இசையைச் செவிமடுக்க முடியாது போனதும் மிகுந்த வருத்தத்தைத் தந்த ஒரு விடயம் தான்.


மகோற்சவம் நடைபெற்று முடிந்தவுடன் வரும் வார இறுதியில் இலங்கையிலிருந்து வரும் தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் விசேட கச்சேரியும் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். இம்முறை அந்த நிகழ்வையும் காணமுடியாதோ? என்று நினைத்திருந்த வேளை பல இடையூறுகளுக்கும் இழுபறிகளுக்கும் மத்தியில் 27.03.22 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிட்னி முருகன் கல்வி கலாசாரமண்டபத்தில் தவில் நாதஸ்வரக் கச்சேரி நடைபெறும் என்ற தகவல் கிட்டியது. அந்த நிகழ்வில் கலைஞர்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பும் எனக்குக் கையளிக்கப்பட்டது.


அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கே வானம் இருண்டு இடி மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது 4.30 மணிக்கு மண்டபத்திற்குள் நுழைந்தபோது கச்சேரிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்த ரசிகர்களினால் மண்டபம் நிறையத் தொடங்கியது. மழை கொட்டும் போது இனிமையான சங்கீதத்தைக் கேட்பதில் ஒரு அலாதி சுகம். அதில் நனைந்து மூழ்குவதோ அதி அற்புதமானதொரு அனுபவம். மழைத்துளிகள் மண்ணில் விழுந்து மண்ணுடன் கலந்து கரைந்து ஓடுவது போல இசைக்கலைஞர்களிடம் இருந்து வெளிப்படும் இசையருவியும் செவிவழிப்புகுந்து ஆத்மாவுடன் கலந்து ஏற்படுத்தும் ஆனந்தம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சி தேவாரத்துடன் ஆரம்பமாகியது. வழமையைப்போல நாட்டை அல்லது ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த உருப்படியுடனோ அல்லது ஒரு வர்ணத்துடனோ அன்றைய மேளக்கச்சேரி ஆரம்பிக்கவில்லை. தவில் நாதஸ்வரக்கலைஞர்கள் நாட்டை இராகத்தில் மல்லாரி இசைக்கச் சிட்னியில் பரதம் பயின்று அரங்கேற்றம் கண்ட நாயகிகளாகிய செல்வி.ஆரணி மோகன், செல்வி. அபி வசீகரன், செல்வி. பூர்வஜா நிர்மலேஸ்வரக்குருக்கள், செல்வி. ஆனந்தி வேலாயுதபிள்ளை ஆகியோர் அதற்கு நடனம் ஆட நிகழச்சி இனிதே ஆரம்பமாகியது.


அதன் பிறகு பகுதாரி இராகக் கீர்த்தனையுடன் மேளக்கச்சேரி தொடர்ந்தது. மனதிற்கு நிறைவான ‘லதாங்கியில் பிறவாவரம் தாரும்’ ‘ஸ்ரீ இராகத்தில்; பஞ்சரத்தினம் எந்தரோமகானு’ அதன்பின் நீண்ட ஆலாபனையோடு ‘கீரவாணியில் முருகனை நீ நினைமனமே’ என்ற உருப்படியைத் தொடர்ந்து அற்புதமானதொரு தனியாவர்த்தனமும் இடம்பெற்றது. இரண்டு வருடங்களின் பின் சுற்றுச் சூழலை மறந்து, ஸ்ருதிசுத்தம,; லயசுத்தம் ஆகிய இரண்டும் நிறைந்த கச்சேரியுடன் ஒன்றி அனுபவித்த அற்புதமான கணங்கள் அவை. ஈழத்தின் இசை வரலாறு என்று கூறினால் அது தவில் நாதஸ்வரக் கலையின் வரலாறாகத்தான் இருக்கும்.


தவில் மேதை தட்சணாமூர்த்தி தவில் என்ற இசைக்கலையின் வித்துவத்தால் உச்சங்களைத் தொட்டவர். தவில் என்ற இசைக்கருவியில் பல்வேறு பரிமாணங்களை நிகழ்த்திக்காட்டியவர். பிறந்த மண்ணாகிய இணுவிலுக்கும், புகுந்த மண் அளவெட்டிக்கும,; தொழில் புரியச் சென்ற தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்த்தவர். தன் தனித்துவமான கலைத்துவத்தால் தவில் என்ற தோற்கருவிக் கலைக்குச் சர்வதேசப் புகழைத் தேடித் தந்தவர். எமது ஈழத்துக் கலைப்புலமையைத் தமிழ் நாட்டில் நிலை நிறுத்தியவர்.


இணுவைக்கும் ஈழத்திற்கும் பெருமை சேர்த்துச் சிறப்பாக இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே கலைப்பாலமாகத் திகழ்ந்து, இந்தியக் கலைஞர்கள் பலரை அழைத்து வந்து, இணுவை ஊருக்கும் ஈழத்திற்கும் கலைவிருந்து படைத்தவர் ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்துவான் திரு ச. விஸ்வலிங்கம் அவர்கள். இவருடை தவப்புதல்வரே இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள்
அவர் வழியைப் பின்பற்றி இன்று யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் பலரும் உலகத்தின் பலபாகங்களுக்கும் அதாவது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கெல்லாம் சென்று ஆலயங்களிலும், திருமண நிகழ்வுகளிலும் தவில் நாதஸ்வர இசையை வழங்கி வருகின்றார்கள். சிறப்பாக இவர்களும் இந்தியா சென்று அங்குள்ள வித்வான்களுடன் கச்சேரி செய்வதுடன் இந்தியக் கலைஞர்களையும் யாழ்ப்பாணம் அழைத்து வந்து இசைவிருந்து அளித்து வருகின்றார்கள்.


ஈழத்தில் வாழ்ந்த தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பொது மக்களோடு ஒட்டி உறவாடி வாழ்ந்து ஈழத்து இசைக்கலையை வளர்த்தவர்கள். ஈழத்து இசை வரலாற்றிற்குப் பெருமை சேர்த்தவர்கள் யாழ்ப்பாண அரசு மடிந்தபின் கலைகளுக்கு ஆதரவு கொடுத்த அரசர்களும் இல்லாது போயினர். தம் சுதந்திரத்தையே பறிகொடுத்து விட்டு கலைகளையும் மொழியையும் எப்படிக் காப்பது? கலைக்கும், மொழிக்கும் எந்தப் பாதுகாவலர்களும் இல்லை. போர்த்துக்கேயர் காலத்தின்பின் கலை மரித்தே போயிருக்கும். இந்த நெருக்கடியான சூழலில் ஆடல், பாடல், நடிப்பு, தவில், நாதஸ்வரம், பிறவாத்தியங்கள் இசைத்தல் என்று எல்லாத்தளங்களிலும் தம் ஆளுமையைச் செலுத்தி ஈழுத்துக் கலை வயலைக் கருகவிடாமற் காத்துச் செழுமையாக வளர்த்து ஈழத்துக் கலைப்புலமையைச் சர்வதேசத்திற்கும் எடுத்துச் சென்றவர்கள் இந்தத் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் தான்.


இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினர் போர்களாலும், அரசியற் சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றாலும் அலைக்கழிக்கப்பட்டு, வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுமல்லாமல் அன்றாடம் வாழ்வதற்கே பல இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருந்தனர். இருக்கின்றனர். இதனால் பொருள் தேடியும் வாழ வழிதேடியும் தமிழர்கள் தாம் பிறந்து, தவண்டு, வளர்;ந்த, வாழ்ந்த உயிரினும் மேலான தாய் நாட்டை விட்டுப் பரவலாகப் புலம் பெயர்ந்து சென்றனர். இவ்வாறான ஒரு சூழலில் கலைகளையும், மொழியையும் வளர்ப்பதும், பாதுகாப்பதும் மிகப் பெரிய சவாலான விடயம். இந்தச் சவால்களுக்கெல்லாம் சளைக்காது முகம் கொடுத்து தாய் நாட்டிற் தவில் நாதஸ்வரக்கலையையும் வாழவைத்து தமது இருப்பையும் உறுதிப்படுத்தப் போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தவில் நாதஸ்வரக்கலைஞர்களைப் பாராட்டுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.


மகோற்சவத்திற்கு இசைவிருந்து அளிக்க வந்த கலைஞர்களாகிய
திரு சின்னராசா சுதாகர்
திரு சுந்தரமூர்த்தி தேவதாஸ்
திரு இராதாகிருஷ்ணன் வஸந்தன்
திரு திரு பாலகிருஷ்ணன்; நர்மதன் (மது)

ஆகியோர் யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த இசை வல்லோர் குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர். மது என்று அழைக்கப்படும் நர்மதன், தேவன் ஆகிய இருவரும் தவில்மேதை தட்சணாமூர்த்தி குடும்பத்தின் அதாவது விஸ்வலிங்கம் குடும்பத்தின் வாரிசுகள் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதாவது தட்சணாமூர்த்தியின் மூத்தசகோதரி திருமதி கௌரி ராஜூ வின் புதல்வராகிய நாதஸ்வர வித்துவான் திரு சுந்தரமூர்த்தி ஆனந்தவல்லி தம்பதியினரின் புதல்வனே தேவதாஸ். (தேவனின் தாயார் ஆனந்தவல்லி தட்சணாமூர்த்தியின் சகோதரர் கோதண்டபாணியின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது)


தட்சணாமூர்தியின் மூத்த சகோதரர் திரு உருத்திராபதியின் இரண்டாவது மகன் புகழ் பெற்ற நாதஸ்வரக்கலைஞர் பாலகிருஷ்ணனின் மகனே மது. சுதாவினுடைய குடும்பமும் வசந்தனுடைய குடும்பமும் விஸ்வலிங்கம் தட்சணாமூர்த்தி என்ற கலைக்குடும்பக் கடலிற் சங்கமித்த இரு நதிகள் எனலாம் சுதாவினுடைய பாட்டி பாக்கியமும் தவில்மேதை தட்சணாமூர்த்தியின் தாயார் இரத்தினமும் சகோதரிகள். அதேபோல வசந்தனின் அப்பாவின் சகோதரிகள் இருவரை தவில் மேதை தட்சணாமூர்த்தியின் சகோதரர்கள் நாதஸ்வர மேதைகளாகிய கோதண்டபாணியும், மாசிலாமணியும் மணந்துள்ளனர். வசந்தனின் பெரியப்பா மிருதங்க வித்துவான் சந்தானகிருஷ்ணனும் தட்சணாமூர்தியின் மூத்த சகோதரர் உருத்திரபதியின் மகளையே மணந்துள்ளார்.


சின்னராசா சுதாகர்.


திரு என் இரத்தினம் சின்னராசா (25.05.1934 – 1991) இணுவிலின் புகழ் பூத்த தவில் வித்தகர். ‘விவகாரவித்வமணி’ ‘தாளஅலங்காரகல்பனாஜோதி’, ‘லயஞானவித்வமணி’, ‘கரவேகலயஞானகேசரி’ ‘தவிற்சக்கரவர்த்தி’ ஆகிய விருதுகளுக்குச் சொந்தக்காரர். 12.12.1968 இல் இந்தியாவில் திருவாவடுதுறை இராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் ‘தங்கத்தவிற்கேடயம்’; வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். இவர் இணுவில் தவில் மேதை தட்சணாமூர்த்தியுடனும் தமிழ் நாட்டிலுள்ள புகழ்பூத்த கலைஞர்களுடனும் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் செய்த கச்சேரிகள் ஈழத்து இசைவரலாற்றை மெருகூட்டியுள்ளன. குறிப்பாக இணுவைக் கந்தன் மகோற்சவ காலங்களில் நடைபெறும் வடக்குவீதிச் சமாவும் இணுவைக் கந்தன் கோயில் முன்றலில் விசேட மேடை அமைத்து அதில் நடைபெறும் தவில் நாதஸ்வரச் சமாக்களும் என்றைக்கும் மறக்க முடியாதவை. இவ்வாறு நடைபெறும் கச்சேரிகளில் இணுவில் கே.ஆர் சுந்தரமூர்த்தி, கே.ஆர். புண்ணியமூர்த்தி சகோதரர்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கும். யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த அத்தனை தவில் நாதஸ்வர விற்பன்னர்களும், இந்தியாவின் புகழ் பூத்த தவில் நாதஸ்வர விற்பன்னர்களும்; அங்கு பிரசன்னமாகி இருப்பர்.


10.05.1971 இல் இணுவிலிற் பிறந்த சுதாகர் சின்னராசா தனது ஆறாவது வயதிற் தந்தையாரிடம் தவிற் கலையைக் கற்க ஆரம்பித்தார். அவரிடம் கற்பது மட்டுமன்றித் தந்தையார் கச்சேரிக்குச் செல்லும் போது சுதாவையும் அழைத்துச் செல்வதால் அக்கச்சேரிகளைக் கேட்டும், சில நேரங்களிற் கச்சேரிகளுக்குத் தாளம் போட்டும் வளர்ந்ததால், சிறு வயதிலேயே லய நுணக்கங்கள் பற்றிய அறிவையும் தந்தையாரிடமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. சிறிய வயதிலேயே கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து விட்ட சுதாகருக்குத் தந்தையாரைப் போன்றே புகழ் பெற்ற இந்தியக் கலைஞர்கள் பலருடனும் வாசிக்கும் பேறும் கிட்டியது. 1998 இல் ‘தவில் இளவரசன்’ 2018 இல் ‘லயபேதவிவகாரசிரோன்மணி’ போன்ற பட்டங்களாற் கௌரவிக்கப்பட்டவர். தற்போது தன் தந்தையின் வழியைப் பின்பற்றி ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தவில் வாசிப்பின் திறமையினால் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
சுந்தரமூர்த்தி தேவதாஸ்.

இணுவிலின் புகழ் பூத்த நாதஸ்வர வித்துவான் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்( 17.09.1939—)மிக நீண்ட நேரம் இராக ஆலாபனைகளைச் செய்ய வல்லவர் சிறந்த பண்பாளர் பிறருக்கு உதவும் பரந்த உள்ளம் கொண்டவர். இந்தியக்கலைஞர்கள் பலருடனும் வாசித்து ஈழத்தின் மிகச் சிறந்த நாதஸ்வர வித்துவானாக அடையாளம் காணப்பட்டவர். தனது இருபதாவது வயதில் இருந்து இசைச் சேவையாற்றி வந்தவர். இளையோர் பலருக்கு நாதஸ்வரம் பயிற்றுவித்து அவர்களை வித்துவத்தன்மையுடன் மிளிர வைத்தவர். 1963 இல் ‘நாதஸ்வர கான கலாரத்தினம்’; , 1966 இல் ‘நாதஸ்வர கலாஜோதி’ இ 1970 இல் ‘நாதஸ்வர இசைரத்தினம்’ இ 2000 இல் இலங்கை அரசின் ‘கலாபூஷணம்’; 2006 இல் ‘ஞானஏந்தல்’; ஆகிய விருதுகள் இவரது இசைச்சேவைக்குக் கிடைத்த கௌரவங்கள் இவற்றோடு 2007 ஆம் ஆண்டுக்கான ‘கௌரவஆளுனர்’ விருதையும் பெற்று இணுவிலுக்கும் ஈழத்தின் இசைவரலாற்றுக்கும் பெருமை சேர்த்தவர்.


08.06.1970 இல் இணுவிலிற் பிறந்த தேவதாஸ் சுந்தரமூர்த்தி தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தையாரிடம் நாதஸ்வரத்தைக் கற்க ஆரம்பித்தார். பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்த காரணத்தினால் க.பொ.த.சாதாரண பரீட்சை எழுதிய பின்னர் அதாவது தனது பதினைந்தாவது வயதில் நாதஸ்வரம் வாசிப்பதே தனக்கு உகந்தது. என்று எண்ணியதால் தந்தையாரிடம் தனது நாதஸ்வரக்கல்வியை ஆழமாகக் கற்க ஆரம்பித்தார். அக்காலத்தில் அதாவது 1987இல் யாழ்ப்பாண மக்களைக் கலங்க அடித்த, பெண்களின் கற்பைச் சூறையாடிய, ‘அமைதிப்படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்த இந்திய இராணுவத்தினரின் தொடர் தாக்குதலிற் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற் தேவதாஸ் சுந்திரமூர்த்தி குடும்பமும் அடங்கும்.

இணுவிற் கந்தசுவாமி ஆலயத்தில் மூன்று மாதத்திற்கு மேல் அகதிகளாக இருந்து, அந்தத் தாக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட்ட பின் அவருடைய தாய் மாமன் நாதஸ்வர வித்துவான் திரு. கே. பஞ்சமூர்த்தி அவர்களிடம் கற்றபடி அவருடைய குழுவிற் சேர்ந்து ஆறுமாதகாலம் பயிற்சி பெற்றார். அதேபோல நல்லூர் திரு பிச்சையப்பா ரஜீந்திரன் அவர்களோடு அவர்களது குழுவில் ஆறு மாதகாலம் வாசித்தபின் அவருடைய தந்தையார் திரு சுந்தரமூர்த்தி, தமயனார் இராமதாஸ் ஆகியோருடன் இணைந்து கச்சேரிகள் செய்து வந்தார். மீண்டும் 1995 இல் ஏற்பட்ட யுத்த நெருக்கடியால் யாழ்ப்பாண மக்களனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டபோது 1995.10.30 அன்று சாரி சாரியாக மக்கள் அனைவரும் கைகளில் அகப்பட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சாவகச்சேரி நோக்கி இரவு பகலாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவ்வாறு சென்றவர்களோடு தேவதாஸின் குடும்பத்தவர்களும் சென்றனர். அவர்கள் அனைவரும் கொடிகாமத்தில் ஆயிரக்கணக்கான மக்களோடு அகதிகளாக பல இரவுகளை அச்சத்துடன் கழிக்க வேண்டி இருந்தது. வாழ்க்கையே போராட்டமா? அல்லது போராட்டமே வாழ்க்கையா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் தேவதாஸ் நாதஸ்வர வாழ்க்கையைத் தொடருவதா? அல்லது வேறு தொழில் ஏதாவது முயற்சிக்கலாமா? என்று சிந்திக்கின்றார். 1989 ‘இசைஞானமணி’, 1992 ‘இசைஞனச்சுடர்’;, 2001 ‘இசைஞானவேந்தன்’ என்ற பட்டங்களாற் கௌரவிக்கப்பட்டவர்.


தற்போது தவில் வித்துவான் சுதாகருடைய குழுவில் இணைந்து கச்சேரிகள் செய்து வருகின்றார். யுத்தகாலத்தில் தந்தையின் அனுசரணையுடன் வாழ்ந்த தேவன் நோய்த்தொற்றுக் காலமாகிய கடந்த இரண்டு வருடங்கள் கச்சேரிகளும் இல்லாமல் அன்றாட ஜீவனத்திற்கே அல்லாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதும். மீண்டும் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியிற் சிக்குண்டு தவிப்பதும் கலைஞனின் சோதனையா? அல்லது தமிழனாகப் பிறந்ததா?


இராதாகிருஷ்ணன் வசந்தன்.


மூளாயிற் பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்த புகழ் பூத்த தவில் நாதஸ்வர வித்துவான் திரு வை ஆறுமுகம் அவர்கள். இவர் ஈழத்திற் பல சிறந்த தவிற்கலைஞர்களை உருவாக்கியுள்ளார். மூளாய் சண்முகசுந்தரமாக இருந்து வலங்கைமான் சண்முகசுந்தரமாக இந்தியத் தவிலுலகில் தனியிடத்தைப் பெற்ற திரு வலங்கைமான் சண்முகசுந்தரம், காலஞ்சென்ற நாதஸ்வர வித்துவான் கோண்டாவில் பாலகிருஷ்ணன், பிற்காலத்தில் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து இயற்கை எய்திய ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்க வித்துவான் சந்தானகிருஷ்ணன், வசந்தனின் தந்தையாகிய காலஞ்சென்ற நாதஸ்வர வித்துவான் இராதாகிருஷ்ணன் ஆகியோர் திரு வை ஆறுமுகம் பெற்றெடுத்த வித்துவச் செல்வங்களாவர்.


ஆறுமுகம் இராதாகிருஷ்ணன் (27.3.1947 – 1985) கல்வி கற்றுக் காவல்துறை அதிகாரியாக நியமனம் பெறவேண்டியவர் பிறப்புச்சாட்சிப் பத்திரத்திலிருந்த தவறான தகவலொன்றால் அவ் உத்தியோகம் கைநழுவிப் போக, அவரது இருபதாவது வயதில் நாதஸ்வரத்தைக் கையிலெடுத்தார்;. பத்து வருடங்களாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்து, பின் 1983 இல் மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் நாதஸ்வரக்கச்சேரி செய்து வந்தவர், உடல் நலக்குறைவால் பிஞ்சுக் குழந்தைகளையும் மனைவியையும் தவிக்க விட்டு, 1985 ஆம் ஆண்டு இவ் உலக வாழ்க்கையைத் துறக்க நேரிட்டது அவருடைய குடும்பத்தவருக்கு ஏற்பட்ட பெரியதோர் இழப்பாகும்.


15.08.1978 இல் கோண்டாவிலிற் பிறந்த இராதாகிருஷ்ணன் வசந்தன் பத்து வயதிற் தனது மாமியார் தையல்நாயகி ஆறுமுகம் அவர்களிடம் (வாய்பாட்டு) சங்கீதத்தைக் கற்க ஆரம்பித்தார். பதினொரு வயதில் சரஸ்வதி பூசையன்று அவரது உறவினர் திரு பஞ்சமூர்த்தி அவர்கள் நாதஸ்வரத்தை வசந்தனின் கையிற்கொடுத்து நாதஸ்வர உலகிற்கு அழைத்தார். தந்தையை இழந்த வசந்தனும் அவருடைய தமயன் ஆனந்தக்கணேசனும் கோண்டாவிலிற் தாயாருடன் வசித்து வந்தனர் 1987 – 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவும், இழப்பும், இடப்பெயர்வுகளும், அமைதியின்மையும், குடும்பத்தலைவரை இழந்த வசந்தனின் குடும்பத்தையும் வெகுவாகப் பாதித்தது. தந்தையையும் இழந்து அநாதரவற்ற நிலையில் யுத்தத்திற்கு மத்தியில் வலுவிழந்த மனதோடு 1990 ம் ஆண்டு தாயாருடன் இந்தியாவில் வசிக்கும் அவர்களுடைய பெரியப்பா வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் தயவை நாடிச் சென்றனர். அவர் தன் தம்பியின் குடும்பத்தை அரவணைத்து, ஆறுதலளித்து முதலில் இருவருக்கும் தவில்,நாதஸ்வரம் ஆகிய இரண்டிலும் ஆரம்பப்பயிற்சிகளை அளித்தார். வசந்தனுக்குத் நாதஸ்வரத்திலேயே அதிக நாட்டம் இருந்ததால் பெரியப்பா திரு வலங்கைமான் சண்முகசுந்தரம் தனது உறவினரான மல்லாரி வாசிப்பில் புகழ்பெற்ற ஆண்டாங்கோயில் ஏ.வி கறுப்பையா ஏ.வி.செல்வரத்தினம் சகோதரர்களில் ஏ.வி செல்வரத்தினம் அவர்களிடம் நாதஸ்வரத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். குரு குலமுறைப்படி அவர்களுடைய இல்லத்திலேயே தங்கி இருந்து முறைப்படி நாதஸ்வரத்தையும் வாய்ப்பாட்டையும் கற்றார். அவருடைய தமயன் ஆனந்தக்கணேசன் பெரியப்பாவுடன் இருந்து குரு குல முறைப்படி தவிலைக் கற்றுக் கொண்டு இருவரும் தாயாருடன் 1994 நடுப்பகுதியில் இல் நாடு திரும்பினர்.


எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளோடு யாழ்ப்பாணம் வந்த சில மாதங்களிலேயே வன்னிக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. போரும் இடப்பெயர்வும் அவரது நாதஸ்வர வாழ்க்கையையும் வளர்ச்சியையும் மிகவும் பாதித்துள்ளது. கற்றவற்றை வாசிக்கவும் மெருகூட்டவும் வழியில்லாது யாழ்ப்பாணத்தில் வாழ அஞ்சி வன்னிக்கு இடம்பெயர நேரிட்டதும் அவர்களது துரதிஷ்டமே.

வசந்தனின் தமயனாருக்குப் போர்க்காலத்தில் ஏற்ப்பட்ட உடல்நலப் பாதிப்பினால் கழுத்துப் பகுதியில் பாரிய சத்திர சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தவில் வாசிக்கும் போது பல உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. தவிலைத் தோளிற் போட்டுக் கொண்டு நின்று வாசிக்க முடியாது. தரையில் இருந்தபடி மட்டுமே அவராற் தவிலை வாசிக்க முடியும். யுத்தத்தின் சுவடுகள் அவர்களுடைய கலை வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வவுனியாவில் வதியும் காலத்தில் சில நல்ல உள்ளங்களின் அனுசரணையுடன் அன்பர் ஒருவர் கொடுத்த புல்லாங்குழலுடன் மிருதங்க வித்துவான் திரு கண்ணதாசனின் பக்க பலத்துடன் வவுனியாவில் திரு பாலசிங்கம் என்பவரிடம் புல்லாங்குழலிசையைக் கற்றுள்ளார். அங்குள்ள ஆலயங்களில் செய்யும் கச்சேரிகளிற் கிடைக்கும் வருமானத்திலும் சில மாணவர்களுக்கு இசையைக் கற்றுக் கொடுப்பதனால் வரும் வருமானத்திலும் வாழ்க்கையை ஓரளவு சமாளிக்க முடிந்துள்ளது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த போது கலையுல வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நிறையச் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். கைதூக்கி விட யாரும் இல்லை. இத்தருணத்தில் அவரது உறவினரான கோண்டாவில் திரு கே. பஞ்சமூர்த்தி அவர்கள் பல வழிகளிலும் வசந்தனுக்கும் அவருடைய அண்ணாவிற்கும் உறுதுணையாக இருந்து அவர்களுடைய கலை வாழ்க்கையைச் செழுமைப்படுத்தியுள்ளார். ‘நாதஸ்வர வேந்தன்’ 2005, ‘லயசுரபி’ 2011, ‘நாதஸ்வரஇசையரசு’ 2012, ஆகியவை அவருக்குக் கிடைத்த பட்டங்களுட் சிலவாகும். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிற்குச் சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.


புல்லாங்குல் வாசிப்பதில் வசந்தன் காட்டும் அக்கறையைக் கண்ட டாக்டர் கெங்காதரன் அவர்கள் அவரை அழைத்துப் புல்லாங்குழல் வாசிப்பிலுள்ள நுணுக்கங்கள் சிலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளார். யாழ்ப்பாணக் கலைஞர்களால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட பல பாடல்களுக்குப் பின்னணிப் புல்லாங்குழலிசை வழங்கியுள்ளார்.

பாலகிருஷ்ணன்; நர்மதன் (மது).


இணுவிலின் புகழ் பூத்த பல்லிசைக் கலைஞர் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களின் இரண்டாவது மகன் பாலகிருஷ்ணன் உருத்திராபதி (15.12.1944 -2018) சிறந்த நாதஸ்வர வித்துவான். நல்ல மனிதர் எப்போதும் புன்னகை சிந்திய வண்ணம் நகைச்சுவையுடன் வாழ்க்கைக் கஷ்டங்களைக் கடந்து வாழ்ந்த ஒருவர். 2016 இல் இலங்கை அரசினாற் ‘கலாபூசணம்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்.


06.11.1983 இல் இணுவிலிற் பிறந்த மது பாலகிருஷ்ணன் அவரது ஏழாவது வயதில் யாழ்ப்பாணம் திரு மெய்ஞானம் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஐந்து வருடகாலம் முறையாகத் தவிற் பயிற்சியைப் பெற்றார். அதன்பின் இணுவில் மஞ்சத்தடியைச் சேர்ந்த திரு இராமதாஸ் அவர்களிடம் தாளம் தொடர்பான நுணக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார் 2007 ஆம் ஆண்டில் இருந்து சுதாகருடன் இணைந்து கச்சேரிகள் செய்து வருகின்றார். 2001 ‘தவில்நாதசொரூபன்’ ‘தவில்நாதகானன்’ ஆகிய பட்டங்களாற் கௌரவிக்கப்பட்டவர்.


இக்கலைஞர்களின் கதைகளைக் கேட்ட போது பல ஆண்டுகள் பின் நோக்கி நான் பயணிக்க நேரிட்டது. ‘ தவில் நாதஸ்வர இன்னிசைக்கான ஒரு யாகசாலையாக இலங்கையே திகழ்ந்தது. இலங்கையில் விழாக்காலங்களில் தவில் நாதஸ்வர மேதைகளை அழைத்து மாதக்கணக்கிற் கச்சேரிகள் நடத்துவது வழக்கமான ஒன்று. சினிமா நடிகர்களைப் பார்ப்பது போன்று நாதஸ்வரத் தவிற் கலைஞர்களைக் காரில் அழைத்துவரும்போதே அவர்களைப் பின் தொடர்ந்து ஓடி வரும் மக்கள் கூட்டம். தமிழக நாதஸ்வரக் கலைஞர்களோ இங்கு வாசிப்பது போன்று ஏனோ தானோ என்று வாசிக்க முடியாது’ என்று தேணுகா என்ற இசை விமர்சகர் இலங்கைக் கலைஞர்களைப் பற்றிப் புகழ்ந்த வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. யுத்தம் தமிழர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிட்டது.


இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே இனம்புரியாத ஒரு வேதனையும் வலியும் ஏற்படுகின்றது. யார் யாரோ வந்தார்கள் தமிழினத்தைத் துன்பப் படுத்தினார்கள், அழித்தார்கள், கலாசாரத்தைச் சிதைத்தார்கள், மொழி வளர்ச்சிக்கு இடையூறு செய்கிறார்கள் என்று, புலம்பும் தமிழர்கள்,என்ன? புலம்பெயர்ந்த பின்னராவது தமக்குள் ஒற்றுமையாகவா இருக்கின்றார்கள்? பதவியாசை, புகழாசை, பேராசை என்றும், தாம் தான் தமிழ் மண்ணின் மைந்தர்கள் என்றும், மொழியின் கலாசாரத்தின் பாதுகாவலர்கள் என்றும் ஒருசாரார் நினைத்துக் கொண்டு, எமது சந்ததியின் எதிர்காலத்திற்கு, எமது சமுதாயத்தினரின் வழமான வாழ்க்கைக்கு உகந்தது என்று பரந்த எண்ணத்துடன், திறந்த மனதுடன் உயர்ந்த குறிக்கோளுடன் இன்னொரு சாரார் செய்ய முயலும் நற்காரியங்களுக்கு இடையூறு செய்த வண்ணம் வாழ்கின்றனர். இது தமிழினத்தின் சாபக்கேடு இல்லையா?


அழுக்கா றவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

பொருள்
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, அவை தடைப்படும் போது வரும் கோபம், கோபத்திற் பிறக்கும் தீயசொல் என்னும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More