இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது .இதனால் நிச்சயம் உயிரிழப்புகள் அதிகரிக்கும். சிறுவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதற்குரிய தீர்வாக எதனையும் வழங்க இன்னமும் நாடாளுமன்றம் தயாராக இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக்கிளை தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக்கிளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில்,
வடக்குமாகாண வைத்தியர்களும், தாதியர்களும் மற்றும் சக மருத்துவப் பணியாளர்களும், நிர்வாகப் பணியாளர்களும் இங்கு இன்று ஒரே நோக்கத்திற்காக ஒன்று கூடி இருக்கின்றோம். தங்களது சுயலாப நோக்கங்களுக்காகவும் அதீத சொகுசு வாழ்க்கைக்காகவும் இந்த நாட்டு மக்களின் வாழ்வினை சீரழித்து பாரிய மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை சிறைக்குத் தள்ளி சுபீட்சமான இலங்கையினை கட்டியெழுப்புவதே இங்கு கூடியுள்ள எங்களின் நோக்கமாகும்.
சகிக்க முடியாத மோசடிகளால் இந்த நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, கல்வி சுகாதாரம் என்பவற்றை எட்டாக்கனியாக்கி மக்களை தெருவில் அலையவிட்டு, தங்களின் கதிரைகளை இறுக பற்றி கொள்வதற்காக அவசரகாலச் சட்டத்தினை அரசாங்கம் பொருத்தமற்ற நேரத்தில் அமுல்படுத்தியுள்ளது.
ஊழல் மோசடிகளின் மூலம் தங்களது வாழ்வும் எதிர்கால தலைமுறையும் சீரழிக்கப்படுவதை உணர்ந்த மக்கள் பெரும் எழுச்சி கொண்டு நாடளாவிய ரீதியில் பெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். மக்களின் ஒரு பகுதியினராகிய நாங்கள், நாட்டில் உள்ள பெருமளவு வைத்தியர்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய அதிகாரிகள் சங்கமானது ஏனைய வைத்தியசாலைப் பணியாளர்களையும் இணைத்து மக்களின் எழுச்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக இன்று வடமாகாணத்தை சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் இங்கு ஊழல் அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுக்க ஒன்று திரண்டுள்ளோம். இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது .
இதனால் நிச்சயம் உயிரிழப்புகள் அதிகரிக்கும். சிறுவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதற்குரிய தீர்வாக எதனையும் வழங்க இன்னமும் பாராளுமன்றம் தயாரானதாக தெரியவில்லை.
இந்த இக்கட்டான , ஆபத்தான காலகட்டத்தில் எமக்கு உதவி புரியும் உள்நாட்டு ,வெளி நாட்டு அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கும், இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நாட்டினை முன்னேற்ற வேண்டும் என நினைக்கவில்லை. இனவாதம் என்னும் போதையினை யுக்தியாகக் கொண்டு சிறுபான்மை மக்களை அடக்கியாண்டு, பெரும்பான்மை மக்களிடம் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, ஏற்பட்ட போர் வன்முறைகளின் இடையே கச்சிதமாக பெருமளவு பணத்தை தங்களது சுகபோகத்திற்காகச் சூறையாடின.
இதனை மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்க காலத்திற்குக் காலம் இனவாத தூண்டல்கள் மூலம் வன்முறைகளை ஏற்படுத்தினார்கள் .இதனை மக்கள் இன்று காலம் கடந்தேனும் உணர்ந்து எழுச்சி அடைந்துள்ளனர்.
இது இலங்கைக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.நாங்கள் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் வைத்தியர்களைப் பிரதிநிதிப்படுத்துவதாலும், இந்தப் பிரதேசம் அரசாங்கங்களின் நீண்டகால அநீதிகளை கண்டுள்ளதாக இங்குள்ள மக்கள் கருதுவதாலும் சுபீட்சமான இலங்கையினைக் கட்டியெழுப்புவதற்கு எங்கள் பக்கக் கருத்துக்களும் இருக்கின்றது. இந்த நாட்டில் நிரந்தர அமைதி ,பொருளாதார மேம்பாடு ஏற்படுவதற்கு இனங்களிற்கிடையே நல்லிணக்கம் பாரிய புரிந்துணர்வுடன் கொண்டுவரப்படவேண்டும்.
இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதிப் பொறிமுறை ஒன்று ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் வாழ வைக்கப்பட வேண்டும்.அனைத்து மதங்களும், இனங்களும் சம அந்தஸ்தும் , அச்சமுமின்றி வாழும் உரிமையும், அரசியல் உரிமையும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் மற்றும் அனைத்து மக்களும் இன பேதமின்றி மனிதாபிமானத்தை முன்னிறுத்தி நாம் கனவு காணும் இலங்கையினைக் கட்டியெழுப்ப அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றுள்ளது.