Home இலங்கை புதிய பிரதமருடன் நாடாளுமன்றம் கூடியது – நுழைவு வீதிக்கு பூட்டு!

புதிய பிரதமருடன் நாடாளுமன்றம் கூடியது – நுழைவு வீதிக்கு பூட்டு!

by admin

பொல்துவை சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாகவும், அதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய பிரதமரின் நியமனத்திற்குப் பின் இன்று நாடாளுமன்றம் கூடுவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நாடாமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (17.05.22) சபாநாயகர் தலைமையில் கூடுகிறது.

எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை பிரதி சபாநாயகர் தெரிவும் இன்று (17.05) இடம்பெற உள்ளதோடு, பிரதி சபாநாயகருக்காக ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்‌ஷவின் பெயரும், எதிர்க்கட்சியின் சார்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினராக ரோஹினி கவிரத்னவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகரின் தெரிவுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமையும் பட்சத்தில் மாத்திரமே நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்டு ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவிற்கு சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர், நிட்டம்புவையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, ​மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மரணித்தார் என தகவல்கள் தெரிவித்தன. எனினும், அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என அறியமுடிகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More